உங்கள் குழந்தையைக் கூப்பிட்டால் திரும்பிப் பார்க்க வில்லையா? உங்கள் முகம் பார்த்துச் சிரிக்கவில்லையா? மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடவில்லையா?மழலைச் சொல் பேசவில்லையா?அல்லது ஏதேனும் சில வார்த்தைகளை அர்த்தமில்லாமல் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டிருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நீங்கள் ‘ஆம்’ என்று பதில் சொன்னால் உங்கள் குழந்தைக்கு ‘ஆட்டிசம்’ பாதிப்பு இருக்க அதிகவாய்ப்பு இருக்கிறது.
ஆட்டிசம் என்பது குழந்தையின் மூளையிலுள்ள நரம்பு மண்டலத்தில் ஏற்படும் வளர்ச்சிக் குறைபாடு. குழந்தையின் 10 – 18 மாதங்களில் இப்பாதிப்பை கண்டறிய முடியும். இப்பாதிப்பு உள்ளவர் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன், சமூகத்தில் கலந்து பழகும் திறன் போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். ஒரே மாதிரி விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வர். இக்குறைபாடு இருப்பதை துவக்கத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்றால் சரி செய்ய வாய்ப்பு உண்டு. ஆட்டிசம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த ஏப்., 2ல் உலக ஆட்டிச விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்படுகிறது.
அறிகுறிகள் என்ன?
தாய் பாலூட்டும் போது தாயின் கண்களைப் பார்க்காது. ஆறு மாதம் ஆனால் கூட தாயின் முகம் பார்த்துச் சிரிக்காது. ஒன்பது மாதம் கடந்த பிறகும் ஒலி எழுப்பினால் அல்லது பெயரைச் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காது. கண்ணில்படும் பொருள்களை ஆர்வமாகப் பார்க்காது; அவற்றைத் தனக்கு விளையாடத் தரும்படி கேட்காது. டாட்டா காட்டுதல் போன்ற கை அசைப்பு இருக்காது. மழலைப் பேச்சு பேசாது. மற்ற குழந்தைகளுடன் விளையாட முயற்சிக்காது. குழந்தையின் வளர்ச்சிப்படிகளில் தாமதம் ஏற்படுவதும்உண்டு. மேற்சொன்ன அறிகுறிகள் தெரிந்தால் போகப் போகச் சரியாகிவிடும் என்று பெற்றோர்கள் எண்ணிவிடக்கூடாது. அதே வேளையில் இவற்றில் ஒருசில அறி குறிகளை மட்டும் வைத்துக் கொண்டு குழந்தைக்கு ஆட்டிசம் உள்ளது என்றும் கணித்துவிடக்கூடாது. பல அறிகுறிகள் இருந்து குழந்தையின் இயல்பான திறமைகள் பாதிக்கப்படுகின்றன என்றால் அப்போது குழந்தைக்கு ஆட்டிசம் ஏற்படுள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆட்டிசம் உள்ள குழந்தைக்கு மூன்று வயதுக்கு முன்னரே மனநல மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சிகிச்சைகளை மேற்கொண்டால் அதனால் ஏற்படும் நன்மைகள் அதிகம்.
என்ன சிகிச்சை?
ஆட்டிசத்துக்கு குறிப்பிட்ட சிகிச்சை எதுவுமிலை. அன்பு ஒன்றே மருந்து. இந்தக் குழந்தைகளுடன் அன்போடு நெருங்கிப் பழகும்போது தான் நம்மை நெருங்கி வருவார்கள். அதனால் இவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும். பூங்கா, கோவில், கடற்கரை, பொருட்காட்சி என்று பல இடங்களுக்கு இவர்களை அழைத்துச் செல்லவேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பல் தேய்த்தல், குளித்தல், சாப்பாடு, தூக்கம் என அன்றாடப் பழக்கவழக்கங்களை ஒழுங்குபடுத்தபயிற்சி தர வேண்டும். குழந்தைக்குப் புரிகிற விதமாக நிறையப் பேச வேண்டும். நீச்சல், சைக்கிள் ஓட்டுதல், ஸ்கேட்டிங் போன்ற பயிற்சிகள் தரப்பட வேண்டும். இப்பயிற்சிகள் அவர்களின் உடல்திறனை அதிகப்படுத்துவது மட்டுமன்றி, தன்னுடைய வேலைகளைத் தானே சுயமாகச் செய்யமுடியும் என்ற தன்னம்பிக்கையைத் தரும்.
Advertisement