நானும் கணவரும் ஒரே துறையில் பணிபுரிபவர்கள். காதலித்து திருமணம் செய்துகொண்டவர்கள். எங்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். கணவரின் தாழ்வு மனப்பான்மை, ஆணாதிக்கம், சைக்கோ குணம் எல்லாம் சேர்ந்து எங்கள் குடும்ப வாழ்க்கையை நரகமாக்க, நான் விவாகரத்து முடிவெடுத்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒருவழியாக விவாகரத்துப் பெற்றேன். இப்போது கல்லூரியில் படிக்கும் மகளுடன் தனித்து வசித்து வருகிறேன்.
ஒரே துறையில் பணி என்பதால், எனக்கும் கணவருக்கும் பொதுவான நண்பர்கள் நிறைய பேர். குறிப்பாக, என் அலுவலகத்திலேயே அவருக்கு நிறைய நண்பர்கள் உண்டு. நான் என் பணியில் புரொமோஷன், டீம் லீடர் இடம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், என்னை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் என் கணவர், என் அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடம் என்னைப் பற்றி அவதூறுகளைத் தொடர்ந்து சொல்லி வருகிறார்.
நான் இந்த அலுவலகத்தில் நீண்ட காலமாகப் பணிபுரிவதால், என் கணவருடன் எனக்கிருந்த பிரச்னைகள் பற்றியும், நான் விவாகரத்து பெற்றது பற்றியும் பலரும் அறிவார்கள்தான். ஆனால், இப்போது என் கணவர், அலுவலகத்தில் என் மதிப்பை குறைக்கும் வகையிலும், என்னைக் கீழ்மைப்படுத்தும் வகையிலும் அவதூறுகளைப் பரப்பி வருவது என் நிம்மதியையும், செயல் வேகத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக, என் நடத்தையை அவர் தவறாகப் பேசி வருவது.
என் கணவர், எனது அலுவலகத்தில் உள்ளவர்களிடம் இப்படி ஒரு பொய் பிரசாரத்தை செய்து வருவது எனக்கே தெரிந்திருக்கவில்லை சில மாதங்களுக்கு முன் வரை. ஒரு நாள், என் ரிப்போர்ட்டிங் ஹெட் என்னை அழைத்து, ‘உங்க கணவர் இங்க நம்ம ஆபீஸ்ல பலர்கிட்டயும் உங்களை பத்தி தப்பு, தப்பா சொல்லிட்டு வர்றார். எங்களுக்கு எல்லாம் உங்களைப் பத்தி தெரியும் என்றாலும், அதையெல்லாம் கேட்கும்போது அவரை கண்டித்துவைக்கணும்னு தோணுது. நீங்க அவர்கிட்ட பேசுங்க. தேவைப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுங்க’ என்று அக்கறையுன் என்னை அழைத்துச் சொன்னபோதுதான், விஷயமே எனக்குத் தெரியவந்தது.
பிறகு, என் அலுவலகத்தில் எனக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்தபோது, ‘உண்மைதான். உன்கிட்ட சொன்னா நீ கஷ்டப்படுவனுதான் சொல்லல. ஆனா, சீனியர்ஸ்ல இருந்து ஜூனியர்ஸ் வரைக்கும் உன் கணவர் எல்லார்கிட்டயும் ஏதாச்சும் ஒரு கதை, உன் மதிப்பை குறைக்கிற மாதிரி, உன்னை இழிவு படுத்துற மாதிரி இப்போ வரை சொல்லிட்டே வர்றார்’ என்றார்கள். அதிலிருந்து, அலுவலகத்தில் யாரை பார்த்தாலும், அவர்கள் என்னை கேலியாகவும், ஏளனத்துடனும் பார்ப்பது போல தோன்றுகிறது. ‘ஒருவேளை இவர்கிட்டயும் என் கணவர் பேசியிருப்பாரோ, அவர் பேசிய கதைகள் இவருக்கும் வந்திருக்குமோ’ என்றெல்லாம் எண்ணத் தோன்றுகிறது.
‘உன் மேல் தவறு இல்லையே, அவர் கூறுவதுபோல் நீ இல்லையே, பிறகு ஏன் நீ அவதூறுகளுக்கு எல்லாம் கவலைப்படுகிறாய்?’ என்று கேட்பது புரிகிறது. ஆனால், ‘என் மேல் தவறு இல்லை’ என்று நான் எல்லோரிடமும் சென்று சொல்லிக்கொண்டிருக்க முடியாது அல்லவா? மேலும், பணியிடத்தில் இந்தப் பிரச்னை என் தன்னம்பிக்கையை, வேலையில் கவனத்தை, நிம்மதியைக் குலைக்கிறது. இதுதான் என் கணவர் எதிர்பார்த்ததும்.
கணவரின் சைக்கோதனத்துக்கு எப்படி முடிவு கட்டுவது?