தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் மகேசுவரி (25). இவர் நாகமலைபுதுக்கோட்டை அருகே உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2-ம் ஆண்டு படித்து வந்தார். மகேசுவரி அங்குள்ள விடுதியில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு விடுதியின் மேல்தளத்தில் மகேசுவரி செல்போனில் பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இரவு 11.30 மணியளவில் திடீரென மரக்கிளைகள் ஒடிந்து விழுவது போன்ற சத்தம் கேட்டது. அலறி துடிப்பது போன்ற சத்தமும் கேட்டதால், அங்கிருந்த மற்ற மாணவிகள் ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது தரையில் ரத்த வெள்ளத்தில் மகேசுவரி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சக மாணவிகள் உடனடியாக இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஆம்புலன்ஸ் மூலம் மகேசுவரியை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மகேசுவரி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகமலை புதுக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தனர். மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.