பல போராட்டங்களுக்கு பிறகு அதிமுகவின் எட்டாவது பொது செயலாளராக போட்டியில்லாமல் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியை பெரிதும் வரவேற்ற அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், மேளதாளத்துடன் நடனமாடியும் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள விளாங்குறிச்சி பகுதியில் அதிமுகவினர் “பாகுபலி” கெட்டப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பேனர் வைத்து தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர். அந்த பேனரில் பாகுபலி திரைப்படத்தில் நடித்துள்ள பிரபாஸ் வேடத்தில் எடப்பாடி நிற்பது போன்றுள்ளது.
மேலும், அந்த பேனரில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அருண்குமார் மற்றும் ஜெயராமன் உள்ளிட்டோரின் புகைப்படங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னதாக அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்திய உடன் அதிமுக அலுவலகத்திற்கு சென்றார்.
அங்கு எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர் ஒருவர் தொப்பி மற்றும் கூலிங் கிளாஸ் உள்ளிட்டவற்றை வழங்கினார். அதை எடப்பாடி பழனிசாமி வாங்கி அணிந்து கொண்டு எம்.ஜி.ஆர் தோற்றத்தில் காட்சி அளித்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.