பாடத்துக்கு ஒருவர் வீதம் அரசு நடுநிலை பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் நியமனம்: பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்

சென்னை: அரசு நடுநிலைப் பள்ளிகளில் பாடத்துக்கு ஒருவர் வீதம் 5 பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதில், உறுப்பினர்களின் கோரிக்கைகள், கேள்விகளுக்கு துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பதில் அளித்து பேசியதாவது: பள்ளிக்கல்வி மேம்பாட்டுக்காக அதிக அளவில் நிதி ஒதுக்கப்பட்டு, இல்லம் தேடி கல்வி, எண்ணும்எழுத்தும் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி வளாகங்களில் உள்ள இடிந்த, பழுதடைந்த கட்டிடங்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இப்பணி ஓராண்டுக்குள் முடிக்கப்படும்.

அரசுப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக ‘நம்ம பள்ளி’ திட்டத்தின்கீழ் இதுவரை ரூ.68.48 கோடி வரை நிதி கிடைத்துள்ளது. சாரணர் இயக்குநரகத்தின் சர்வதேச மாநாட்டை தமிழகத்தில் நடத்த திட்டமிட்டு வருகிறோம்.

ஆசிரியர்களின் பணி போற்றுதலுக்குரியது. அவர்களை இந்த அரசுஒருபோதும் கைவிடாது. நிதிநிலைக்கு ஏற்ப, அவர்களது கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாகநிறைவேற்றப்படும். ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்றுவது குறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்.

3,536 அரசுப் பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் ரூ.175 கோடியில் அமைக்கப்படும். 7,500 தொடக்கப் பள்ளிகளில்ரூ.150 கோடியில் ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். 25 மாவட்டங்களில் உள்ள மாதிரி பள்ளிகள் திட்டம் மேலும் 13 மாவட்டங்களுக்கு ரூ.250 கோடியில் விரிவுபடுத்தப்படும். மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, ரூ.10 கோடியில் வாசிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 2 விளையாட்டு சிறப்பு பள்ளிகள் ரூ.9 கோடியில் ஏற்படுத்தப்படும். பிற மாநில குழந்தைகள் தமிழில் பேசவும், எழுதவும் ‘தமிழ் மொழிகற்போம்’ எனும் திட்டம் தொடங்கப்படும்.

6 முதல் 8-ம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கொண்ட அரசுப் பள்ளிகளில் பாடத்துக்கு ஒருவர் வீதம் 5 பட்டதாரிஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் எண்ணும் எழுத்தும் திட்டம் ரூ.8 கோடியில் விரிவுபடுத்தப்படும். தொழிற்கல்வி பாடங்களுக்கு தேவையான ஆய்வகங்கள் ரூ.10 கோடியில் தரம் உயர்த்தப்படும்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம்உருவாக்கப்படும். 1 முதல் 10-ம்வகுப்பு வரை பயிலும் பார்வைத் திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்காக டிஜிட்டல் புத்தகங்கள் உருவாக்கப்படும்.

புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் கற்போர் மையங்களுக்கு ரூ.11 லட்சத்தில் விருது வழங்கப்படும். தமிழ்நாடு பாடநூல் கழகம் மறுசீரமைக்கப்படும். இளைஞர் இலக்கிய திருவிழா நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.