பள்ளிப்பட்டு: திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் நேற்று நடந்தது. பேரூராட்சி தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத் தலைவர் ராமகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். முன்னதாக பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் (பொ) வரவேற்றார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் திடக்கழிவு திட்டத்தின் கீழ் பயன்படுத்தப்பட்டு வரும் தள்ளுவண்டிகளுக்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை தரம் பிரித்து வாங்க தேவையான பிளாஸ்டிக் குப்பை தொட்டிகளை பொது நிதியிலிருந்து மேற்கொள்ள அனுமதி, பேரூராட்சிகளின் இயக்குநர் கடிதப்படி பேரூராட்சி பகுதியில் உள்ள சி.எப்.எல். சோடியம் மற்றும் குழல் விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக மாற்றம் செய்ய சுழல்நிதியின் கீழ் கடன்பெற்று ரூ.18.41 லட்சம் மதிப்பீட்டில் 361 விளக்குகள் பொறுத்தப்படும்.
15வது மானிய நிதிக்குழு திட்டத்தில் ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் லட்சிகான் குளத்தினை மேம்படுத்தி பராமரித்தல், நாகாலம்மன் கோயில் தெருவில் உள்ள பொது சுகாதார வளாகத்தில் பழுதுகளை சரி செய்தல், வாணிவிலாசபுரம் பொது சுகாதார வளாகத்திற்கு இணைப்பு சாலை மற்றும் கல்வெட்டு அமைக்கும் பணிகள் மேற்கொள்ளுதல், பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில் தாட்கோ நிறுவனம் மூலம் கட்டப்பட்ட 10 கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
மேற்படி கடைகளின் வாடகை 50 சதவிகிதம் தாட்கோ நிறுவனத்திற்கும் 50 சதவிகிதம் பேரூராட்சிக்கும் என்று அறிவித்துவிட்டு இதுவரை தாட்கோ நிறுவனம் பேரூராட்சிக்கு பங்கு தொகை வழங்கப்படாததால், தாட்கோ மூலம் கட்டப்பட்டுள்ள கடைகள் பேரூராட்சிக்கு ஒப்படைக்க வேண்டும் என்பது உட்பட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் தி.முக. அ.தி.முக மற்றும் காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர். முடிவில் இளைநிலை உதவியாளர் குப்பன் நன்றி கூறினார்.