பூந்தமல்லி: போரூர் சுங்கச்சாவடியில் ஓராண்டாக, 10 சக்கர லாரிக்கு கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போரூர் அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ராமதுரை(49). இவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், போரூர் சுங்கச்சாவடியில் 10 சக்கரம் கொண்ட தன்னுடைய இரண்டு லாரிகளுக்கு 16 சக்கர வாகனங்களுக்கு உண்டான கட்டணம் வசூல் செய்து விட்டனர். கடந்த ஓராண்டில் சுமார் இரண்டு லட்சம் வரை முறைகேடாக ”பாஸ்ட்டேக்” மூலம் பணம் வசூலிக்க பட்டுள்ளது. எனவே, முறைகேடாக பணத்தை எடுத்த சுங்க சாவடி நிர்வாகிகள் மீது, தக்க நடவடிக்கை எடுத்து, பணத்தை மீட்டு தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகார் தொடர்பாக, மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர் யுவராஜ் கூறுகையில்: ‘‘போரூர் சுங்கச்சாவடியில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கிறார்கள். தற்போது சுங்கச்சாவடிகளில் ஆப் மூலம் பணம் எடுக்கப்படுவதால், எவ்வளவு கட்டணம் வசூலித்தார்கள் என்பது உடனடியாக தெரிவதில்லை. தற்போது இரண்டு வாகனங்களூக்கு மட்டும் இரண்டு லட்சம் வரை முறைகேடாக பணம் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் தினமும் லட்சக்கணக்கான வாகனங்களூக்கு முறைகேடாக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. முறைகேடாக கட்டணம் வசூலித்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாஸ்ட் டேக் ஆப் மூலம் நடக்கும் கொள்ளையை தடுக்க வேண்டும் என்பதற்காகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.’’ என தெரிவித்தார்.