இரண்டு மகன்களை ஏரியில் தள்ளி கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த ரபி பெல்தாரி – பானு தம்பதிக்கு இம்ரான், சோகைல் என்று இரண்டு மகன்கள் இருந்தனர். இந்நிலையில் மனைவி பானுவுக்கு வேறு ஒரு ஆணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தெரியவந்த ரபி, பழக்கத்தை விடும்படி வலியுறுத்தியுள்ளார். இதனால் கணவன் மனைவிக்கும் இடையே அடிக்கடி சண்டை வந்துள்ளது. ஒரு கட்டத்தில் மனைவியை அடித்து விட்டு இரண்டு மகன்களை கூட்டிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
மூன்று பேரும் சென்று பல மணி நேரம் ஆகியும் வீட்டிற்குத் திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் பானு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பொக்கராய செருவு என்ற இடத்தில் உள்ள ஏரியில் மூன்று சடலங்கள் கிடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அங்குச் சென்று பார்த்தபோது அது ரபி பெல்தாரி அவர்களது மகன் இம்ரான், சோகைல் என்பது தெரியவந்தது. இதையடுத்து மூன்று பேரின் உடலை போலீஸார் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனர்.
உயிரிழந்த ரபி பெல்தாரின் சட்டைப் பையிலிருந்து கடிதம் ஒன்றை போலீஸார் மீட்டுள்ளனர். அதில், மனைவியின் நடவடிக்கை சரியில்லாததால் மூன்று பேரும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று எழுதியிருந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in