புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரி சட்டப்பேரவையில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சிவா, திமுக எம்எல்ஏக்கள் நாஜிம், அனிபால் கென்னடி, செந்தில்குமார், நேரு (ரங்கசாமி ஆதரவு சுயேச்சை) ஆகியோர் நேற்று தீர்மானம் கொண்டுவந்தனர்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேசும்போது, “கடந்த 36 ஆண்டுகளில், 13 முறை மாநில அந்தஸ்து கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், மத்திய அரசு நிராகரித்து வந்துள்ளது. மக்கள் பிரதிநிதிகளான முதல்வர், அமைச்சர்கள் முடிவு எடுக்காமல், தலைமைச் செயலர், ஆளுநர் ஆகியோர் முடிவு எடுக்கும் நிலை உள்ளது. பெரும்பாலான கோப்புகள் ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்படுவதால், அரசின் அதிகாரம் குறைந்துள்ளது. எனவே, மாநில அந்தஸ்தை அரசு தீர்மானமாக கொண்டுவர வேண்டும்” என்றார்.
இதையடுத்து, தீர்மானம் கொண்டுவந்த எம்எல்ஏக்கள், இந்தக் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினர். பின்னர், என்.ஆர்.காங்கிரஸ், பாஜக, திமுக, காங்கிரஸ் மற்றும் சுயேச்சை எம்எல்ஏக்கள் அனைவரும் மாநில அந்தஸ்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், “இது சிறப்பான தருணம். ஏற்கெனவே நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், மாறுபட்ட கருத்து தெரிவித்த இருவர்கூட தற்போது மனம் மாறி, ஆதரவு தெரிவித்துள்ளனர். மாநில அந்தஸ்து கோரிக்கைக்கு பாஜக முழு ஆதரவு தரும்” என்றார்.
முதல்வர் ரங்கசாமி பேசும்போது, “நமது உரிமை நிலைபெற, மாநில அந்தஸ்து பெறுவது அவசியம். எனவே, எம்எல்ஏக்கள் அனைவரையும் டெல்லி அழைத்துச் சென்று, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்களைச் சந்தித்துப் பேசி, இந்த ஆண்டுக்குள் மாநில அந்தஸ்து பெறுவோம்” என்றார். அப்போது, அனைத்து எம்எல்ஏக்களும் கைதட்டி வரவேற்றனர். தொடர்ந்து, மாநில அந்தஸ்து கோரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக பேரவைத் தலைவர் செல்வம் அறிவித்தார்.