புதுடில்லி, :ஜி.எஸ்.டி., வரி வசூல், கடந்த மார்ச் மாதத்தில் 13 சதவீதம் உயர்ந்து, 1.60 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜி.எஸ்.டி., வரிவிதிப்பிற்கு பிறகு இதுவரை இல்லாத
இரண்டாவது அதிகபட்ச வசூல் இதுவாகும்.
மேலும், கடந்த மார்ச் மாதத்தில், ஜி.எஸ்.டி.,க்கான வரித்தாக்கலும், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து
உள்ளது.
நிதி அமைச்சகம்
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2022-23ம் நிதியாண்டில், மொத்த வரி வசூல் 18.10 லட்சம் கோடி ரூபாய். இது முந்தைய ஆண்டை விட, 22 சதவீதம் அதிகமாகும். முழு ஆண்டுக்கான சராசரி மொத்த மாத வசூல் 1.51 லட்சம் கோடி ரூபாய்.
கடந்த நிதியாண்டில் நான்காவது முறையாக மொத்த ஜி.எஸ்.டி., வசூல் 1.50 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. இது ஜி.எஸ்.டி., அமல்படுத்தப்பட்ட பின், மார்ச் மாதத்தில் வசூலாகும் இரண்டாவது அதிகபட்ச வசூல் என்பதை பதிவு
செய்துள்ளது.
நடப்பாண்டு, 2023ம் ஆண்டு மார்ச் மாத ஜி.எஸ்.டி., வருவாய் முந்தைய ஆண்டு இதே மாதத்தில் வசூலான வரி வருவாயைவிட 13 சதவீதம் அதிகம். மேலும் 2023 மார்ச் மாதத்தில் ஜி.எஸ்.டி.,க்கான வரி தாக்கலும் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது.இவ்வாறு நிதி அமைச்சகம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கடந்த நிதியாண்டில்
* மொத்த வசூல் : 18.10 லட்சம் கோடி ரூபாய்
* சராசரி மாத வசூல்: 1.51 லட்சம் கோடி ரூபாய்
* முந்தைய ஆண்டை விட, 22 சதவீதம் அதிகம்.
* மாத வசூல், நான்கு முறை 1.50 லட்சம் கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது.
* அதிகபட்சமாக, கடந்த ஆண்டு ஏப்ரலில், வசூல் 1.68 லட்சம் கோடி ரூபாய்