பட்டியல் சமூக மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்குடன் மாவட்ட வாரியாக செயல்பட்டு வருகிறது தாட்கோ திட்டங்கள். சுயமாக முன்னேற நினைக்கும் பட்டியலின மக்களும், இளைஞர்களும் தாட்கோ மூலம் மானியத்துடன் வங்கி கடன் பெற்று, அடுத்த கட்டத்திற்கு செல்வதுண்டு. இந்த கடனை பெறுவதற்குள் லஞ்ச லாவண்யம், வரன்முறைகள் என அம்மக்கள் படும்பாடும் தனி என்றால், விழுப்புரம் மாவட்ட தாட்கோ மேலாளரோ (பொறுப்பு) கடனுதவி கேட்ட இளைஞரை ஒருமையில் பேசி, திட்டிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பாவந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவனேசன். முதுகலை பட்டதாரி இளைஞரான இவர், மாடுகளை வாங்கி பால் பண்ணை அமைப்பதற்காக வங்கி கடனுதவி கேட்டு தாட்கோ மூலம் விண்ணப்பித்திருக்கிறார். அதற்கான நேர்காணலின் போதும் இவருக்கு வங்கிக் கடனுதவி வழங்குவது என முடிவாகியுள்ளது. சுமார் 2 மாதங்களை கடந்த பின்னரும் அதற்கான பரிந்துரை கடிதத்தை தாட்கோ அதிகாரிகள் உரிய வங்கிக்கு வழங்கவில்லையாம். எனவே, விழுப்புரம் தாட்கோ அலுவலகத்திற்கு சென்று, அதன் மேலாளர் (பொறுப்பு) மணிமேகலையிடம் விளக்கம் கேட்டிருக்கிறார் சிவனேசன். அப்போது அந்த அதிகாரி பேசிய வீடியோ காட்சிகள் தான் தற்போது வெளியாகி அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த காட்சிகளின் விவரங்கள் பின்வருமாறு, “பால் கொள்முதல் செய்யும் நிறுவனத்தின் கடிதமே இதில் இல்லையே. இதுக்கு டிகிரி எல்லாம் வேற உடன் வச்சிருக்கியா நீ… மாட்டு லோனுக்கு! கால்நடை மருத்துவரிடம் தான் அறிக்கை வாங்கணும். ஆடிட்டர் கிட்ட எதுக்கு வாங்குனீங்க. என்ன கருமத்துக்கு வாங்கினீங்க, எவன் சொன்னது. மேய்கிறது மாடு… இதற்கு எதுக்கு ஆடிட்டர் கிட்ட திட்ட அறிக்கை வாங்குனீங்க. 12 மாடு வாங்குறீங்க எவ்வளவு நிலம் இருக்குது. நிலத்துக்கான டாகுமெண்ட் வச்சிருக்கீங்களா… பசுந்தீவனம் பயிர் பண்ணி இருக்கீங்களா. கறவை மாடு எனும் போது… 6 கண்ணுக்குட்டி என்றாலும், மொத்தம் 18 மாடு ஆகுது.
எங்கு கொட்டகை போட்டு வச்சிருக்கீங்க. அதற்கு இடம் இருக்குதா? நிலம் இருக்குதா? இத்தனையும் பேங்க் மேனேஜர் கேப்பாங்க. நண்பர் கிட்ட 1000 ரூபா கடன் வாங்கணும் என்றாலும் எத்தனை நடை நடப்பீங்க. பேங்க்ல இருந்து 7 லட்சம் ரூபாய் தூக்கி இவருக்கு கொடுத்திடனும். ஆனா, இவங்க பேங்க்குக்காரன் கேக்குற எதையும் கொடுக்க மாட்டாங்க. நீ ஒன்னும் அவங்க கிட்ட கொடுத்து வச்சில்ல. பேங்க் காரங்களுக்கும் ரூல்ஸ் இருக்குமில்ல” என்கிறார்.
அப்போது சிவனேசனோ, “இல்லாததால் தானே லோன் கேட்கிறோம். கொடுத்து வச்சு தான் லோன் வாங்க முடியுமா மேடம். வங்கியில் கணக்கு தான் வச்சிருக்கேனே போதாதா” என்கிறார்.
மற்றொரு வீடியோவில் பேசும் அதே பெண் அதிகாரி, “ஒரு பேங்க்ல லோன் கேட்டு போனவரை ‘ஜாவ் ஜாவ்’ என பேங்க் அதிகாரி துரத்தினார் என்றும், சாதி பெயரை சொல்லி திட்டினார் என்றும் புகார் போகிறது. ‘வெளியே போ’ என சொல்லத் தெரியாதவர் எப்படி சாதி பெயரை சொல்லி திட்டியிருக்க முடியும். அதனால், பேங்க்குக்காரன் என்ன நினைப்பான்… ‘இப்போதே இப்படி பேசறானே, லோனை கொடுதுட்டதுக்கு அப்புறமா, லோனை கட்டவில்லையே என வீட்டுக்கு போய் கேட்கும் போது, “பொண்டாட்டி கைய புடிச்சு இழுத்துட்டான்” என சொல்லுவானே’ என்று யோசிப்பான். இது போன்ற லோன் கேட்க போகும்போது, கட்சிக்காரர், வழக்கறிஞர், போலீஸ்னு யாரையும் கூடவே கூட்டிகிட்டு போகாதீங்க என நிறைய முறை சொல்லி இருக்கிறேன்” என்கிறார்.
அதற்கு அந்த இளைஞரோ, “லோன் வாங்குறதுக்குள்ளேயே நீங்க இவ்ளோ பண்றீங்களே. நாங்க எங்கிருந்து லோன் வாங்க போறோம்! பலமுறை கேட்டுட்டு, 3-வது முறையா அப்ளை பண்ணுறேன். ஆனா, நீங்க ‘இவ்ளோத்ரம் கொடுக்க முடியாது’ என டென்ஷனா பேசுறீங்களே…” என்கிறார்.
அதற்கு பதிலளித்து பேசும் பெண் அதிகாரி, “இதை அப்படியே அனுப்புறேன். நாளைக்கு பேங்குக்காரன் திருப்பி அனுப்பட்டும். நீ இன்னும் பத்து முறை திருப்பி எடுத்துட்டு வந்துக்கொடு, அவ்ளோதான். 8,24,000 ரூபா கேட்டிருக்கீங்க அப்படியே அனுப்புகிறேன். நிலத்து டாக்குமெண்ட் எடுத்துட்டு வந்து கொடுங்கோ” என்று காட்டமாக பதில் அளிக்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், பாதிக்கப்பட்ட இளைஞர் சிவனேசனிடம் பேசினோம். “இரண்டு மாதங்களுக்கு முன்பு தாட்கோ மூலம் கடன் உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தேன். நேர்காணலில் பங்கேற்றபோது கடன் உதவி கிடைக்கும், சம்பந்தப்பட்ட வங்கிக்கு பரிந்துரை கடிதம் அனுப்பவோம் என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள். ஆனால் கடிதம் வங்கிக்கு அனுப்பப்படாததால் தாட்கோ அலுவலகத்திற்கு சென்று மேலாளர் மேடமிடம் கேட்டேன். சில ஆவணங்கள் இல்லை என்றவர், ஒருமையிலும், மனம் வருந்தும் வகையிலும் பேசினார். “இத்தனை லட்சத்தை உனக்கு எடுத்து நொட்டிடுவாங்களா… நீ என்ன கொடுத்தா வச்சிருக்க. கடனை கொடுத்து விட்டால் திருப்பி கட்டமால் இருப்பானுவ. வீட்டிற்கு வந்து லோன் காசு கேட்டால், மனைவியை கைய புடிச்சு இழுத்துட்டான் என சொல்லுவானுங்க. இவ்வளவு பிரச்சனை இருக்கு… உனக்கு 12 மாடு எப்படி கொடுத்துடுவாங்க” என்று சொன்னாங்க.
அப்புறம், சொந்த நிலம் இருந்தா தான் லோன் கொடுப்பாங்கனு சொன்னாங்க. அதற்கு நான், ‘அப்பா பெயரில் 25 சென்ட் நிலம் இருக்கு. மீதி இருந்த இடத்தை குடும்ப கஷ்டத்தால் விற்றுவிட்டோம் மேடம்’ என்றேன். “நீங்க நிலத்து பட்டா, சிட்டா நகல் வைங்க. பேங்க்ல லோன் கொடுத்தாலும், கொடுகாட்டியும் பார்த்துக்கோங்க” என்று சொன்னாங்க. நாங்க அப்படியே கிளம்பி வந்து விட்டோம். பட்டியலின ஏழை, எளிய மக்கள் பயனடைய வேண்டும் என்று தான் தாட்கோ திட்டமே கொண்டுவரப்பட்டது. ஆனால் இவர்கள் பேசுவதற்கெல்லாம் சாதாரண மக்கள் பயன்பெறவே முடியாது. புரோக்கர்களை வைத்துக் கொண்டு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் கடன் கொடுக்கிறார்களோ என தோன்றுகிறது.
நான் பொருளியல் எம்.ஏ., பி.எட் முடித்திருக்கிறேன். எனக்கு இரண்டு பிள்ளைங்கள் இருக்கிறார்கள். வேலை கிடைக்காததால்தான் ஏதோ மாடு வாங்கியாவது பிழைப்பு நடத்தி என் பிள்ளைகளை காப்பாற்றலாம் என பார்த்தேன். ஆனா அந்த மேடம் இப்படி எல்லாம் பேசி மனசை நோகடித்து விட்டார்கள். படித்த நமக்கே இப்படி என்றால், படிக்காத மக்களெல்லாம் அந்த லோனை நிச்சயம் வாங்கவே முடியாது. அந்த மேடம் லோனை கொடுக்கும் எண்ணத்திலேயே இல்லை. எப்படியாவது பேசி அனுப்பிவிடலாம் என்று இருக்கிறார்கள். இது சம்பந்தப்பட்ட விசாரணைக்கு எங்கு கூப்பிட்டாலும் நான் வருவேன். எனக்கு லோன் கிடைக்காமல் போனாலும் பரவாயில்லை. இனி யாரையும் இவர்கள் இப்படி எல்லாம் பேசக்கூடாது. திங்கள் கிழமை அன்று தாட்கோ எம்.டி, மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுக்க உள்ளேன்” என்றார் ஆதங்கமாக.
இது குறித்து விளக்கம் கேட்க விழுப்புரம் மாவட்ட தாட்கோ மேலாளர் (பொறுப்பு) மணிமேகலையிடம் பேசினோம். “அவர்கள் கூட்டுறவு வங்கி கணக்கை வைத்து தான் தாட்கோவில் விண்ணப்பித்து இருந்தார்கள். அதனுடைய வழிமுறை என்னவென்றால்… பால் பண்ணை வைத்தால், 2.5 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அதற்காக நான் சொன்னது, ‘நிலம் உங்கள் பெயரில் இல்லை என்றாலும் பரவாயில்லை. உங்களுடைய அப்பா பெயரிலோ, கூட்டு பட்டாவிலோ இருந்தாலும் போதும். அதைக் கொடுங்கள் நான் பரிந்துரை அனுப்பி வைக்கிறேன்’ என்றேன்.
மேலும், பால் கொள்முதல் செய்யும் நிறுவனத்தின் ஒப்புதல் கடிதம், கால்நடை மருத்துவரிடம் திட்ட அறிக்கையையும் கேட்டேன். ஆனால், அவர்கள் இதை அளிக்காமல், வருமான வரி தணிக்கையாளரிடம் அறிக்கையை வாங்கி உள்ளே வைத்துள்ளார்கள். லோன் தரவேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிப்பது இல்லை. மாவட்ட ஆட்சியர் தலைமையிலான 11 பேர் கொண்ட குழு தான் தீர்மானிக்கிறது. எங்களிடம் அந்த விண்ணப்பம் வரும்போது நாங்கள் சரி பார்த்து பார்வர்ட் பண்ணுவோம் அவ்வளவுதான். ஆனால், இவற்றை நான் சொன்ன போதும் அதை எல்லாம் ஏற்றுக் கொள்ளாமல்… சுமார் 4 பேர் என்னை சுற்றி நின்று கொண்டு, 20 நிமிடத்திற்கும் மேலாக என்னிடத்தில் வாக்குவாதம் செய்தார்கள். பின்னர் கோபம் வரும் சூழலுக்கு நான் தள்ளப்பட்டதும் கடைசி நேரத்தில் இவ்வாறு ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள்.
அவர் என்னிடம் பேசும்போது, “நான் டிகிரி வைத்திருக்கிறேன்… டிகிரி வைத்திருக்கிறேன்…” என்று சொன்னதற்காக, “மாடு மேய்ப்பதற்கு டிகிரி சர்டிபிகேட் எதற்கு. நான் கேட்கவே இல்லையே” என்றுதான் சொன்னேன். என்னுடைய பொறுப்பு கடலூர் மாவட்டம் தான். ஆனால், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களையும் கூடுதலாக பொறுப்பெடுத்து பார்க்கிறேன். நான் நேர்மையாக இருப்பது சிலருக்கு இடையூறாக இருக்கலாம். இவை எல்லாவற்றையுமே திட்டமிட்டே செய்திருக்கிறார்கள்” என்றார்.