ராமேஸ்வரம் கோயில் மூலவர் படங்கள் இணையத்தில் ‘லீக்’

ராமேஸ்வரம் :  ராமேஸ்வரம் கோயில் மூலவர் படங்கள் இணையதளத்தில் வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக கோயில்களில் கர்ப்ப கிரகத்தில் வீற்றிருக்கும் சுவாமி, அம்பாளின் உருவங்களை படம் பிடிப்பதற்கு அனுமதி இல்லை. இது ஆன்மீக மரபாக காலம் காலமாக நடைமுறையில் உள்ளது.
 இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கருவறையில் லிங்க வடிவில் வீற்றிருக்கும், ராமநாதசுவாமியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும்போது மொபைல் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது. இந்த படம் வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகிய இணையத்தில் வெளியானதால் நாடு முழுவதும் பக்தர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பக்தர்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் மூலவரை புகைப்படம் எடுத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

பக்தர்கள் கூறுகையில், ‘‘ராமேஸ்வரம் கோயிலுக்குள் போட்டோ, வீடியோ கேமராக்கள் எடுத்துச் செல்ல தடை உள்ளது. கோயில் பாதுகாப்பு கருதி மொபைல் போன்களை கொண்டு செல்லவும் அனுமதி இல்லை. ஆனால் கோயில் ஊழியர்கள், அரசியல் பிரமுகர்கள், யாத்திரை பணியாளர்கள், காவல் துறையினர் மொபைல் போனை கோயிலுக்குள் எடுத்து செல்கின்றனர். நுழைவு வாசலில் இதனை தடுக்க வேண்டிய போலீசாரும் கண்டுகொள்வதில்லை.

 இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூட கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவரின் வாட்ஸ் அப் தளத்தில் மூலவர் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது கோயில் ஊழியர் ஒருவர்தான் இதற்கு காரணம் என்று தெரிய வந்தது. ஆனால் கோயில் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது இரண்டாம் முறையாக இச்சம்பவம் நடந்துள்ளது. எனவே இதற்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.