பியாங்யாங்: வடகொரியா மனிதாபிமானமற்ற முறையில் குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் தூக்கிலிடுகிறது என்று தென்கொரியா குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில், “ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட கொரியா தூக்கிலிட்டுள்ளது. உடல் வளர்ச்சி குறைந்த பெண்களை இனம் கண்டு அவர்களின் கர்ப்ப பையை நீக்கவும் வடகொரியா உத்தரவிட்டிருக்கிறது. மேலும், தன்பாலின ஈர்ப்பாளர்களையும், பிற மதங்களை வழிப்பட்டவர்களையும் வடகொரியா தூக்கிலிட்டுள்ளது” என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், வடகொரியாவின் தூக்குத் தண்டனை பட்டியலில் குழந்தைகள் இருப்பதாகவும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், 2017 முதல் 2022 வரை, வடகொரியாவில் நடந்த கொடூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து, நாட்டிலிருந்து தப்பி ஓடிய 500-க்கும் மேற்பட்ட வடகொரியர்களிடம் இருந்து சாட்சியம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வடகொரியா என்னும் புதிர்: வடகொரியா தனது உள்நாட்டு விஷயங்கள் அனைத்தையுமே ராணுவ ரகசியம் போல் பாதுகாக்கும். அங்கு என்ன நடக்கிறது என்ற உண்மை நிலையை உலக நாடுகள் அவ்வளவு எளிதில் அறிந்துகொள்ள முடியாது. ஊடகங்களும் அரசுக் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றன. கரோனா பெருந்தொற்று உலகையே ஆட்டிப்படைக்கும் போதும் கூட அங்குள்ள தொற்று நிலவரம் குறித்து உண்மையான விவரம் உலகுக்குத் தெரிவதில்லை.
மேலும், உள்நாட்டிலேயே அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு முன்னுரிமை கொடுக்கத் தொடங்கியது வடகொரியா. அப்போதிலிருந்தே விதவிதமான பொருளாதாரத் தடைகளை அது பல நாடுகளிலிருந்து சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறது.