வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் மின்பாதை உயரம் 30 அடியாக அதிகரிப்பு

*மின்வாரியம் அதிரடி நடவடிக்கை

அம்பை : வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் மின்பாதையின் உயரம் 30 அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளியில் சக்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள், கடந்த மார்ச் 7ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 18ம் தேதி பாலக்கோடு அருகே கெலவள்ளி அருகே உள்ள ஏரிக்கரையில் ஏற முயன்ற ஆண் யானை, அங்கு தாழ்வாக இருந்த உயரழுத்த மின் பாதையில் உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது. இதேபோல் கடந்த 25ம் தேதி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அடுத்த பூச்சியூர் அருகே ஆண் யானை, மின்கம்பத்தில் மோதி மின்சாரம் பாய்ந்து பலியானது.

யானைகளின் தொடர் மரணங்களை தொடர்ந்து வனவிலங்குகள் பாதிக்கப்படாதவாறு மின் பாதைகளுக்கு கீழே செல்லும் மின்கம்பிகளை உயர்த்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உத்தரவிட்டார். அதன்பேரில், கடந்த 27ம் தேதி வன விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு நெல்லை மின் பகிர்மான வட்டம் சார்பில் சிறப்பு ஆய்வு கூட்டம், நெல்லை மண்டல தலைமை பொறியாளர்(பொறுப்பு) குருசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், வனவிலங்குகள் செல்லும் பகுதிகளில்  தேவையான இடங்களில் மின் பாதைகளின் உயரத்தை அதிகரிப்பதற்கு வன அலுவலர்களுடன் இணைந்து மின் பாதைகளை உயரத்தை உடனடியாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டது.

இதையடுத்து கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் உள்ள ஸ்ரீராமன்குளத்தில் கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் சுடலையாடும் பெருமாள், உதவி செயற்பொறியாளர் மகேஷ் சுவாமிநாதன், உதவி மின் பொறியாளர் கல்லிடைக்குறிச்சி பிரிவு குமார், அம்பை வனச்சரக அலுவலர் வித்யா மற்றும் வன பணியாளர்கள் ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.  இதைத்தொடர்ந்து வன விலங்குகள் மின் பாதையை கடக்கும்போது பாதிக்காமல் இருப்பதற்காக 24 அடியாக உள்ள மின்கம்பங்களை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்பேரில் நேற்று முன்தினம் 30 அடியில் 2 மின் கம்பங்களும், நேற்று 30 அடியில் 2 மின்கம்பங்களும் உடனடியாக நடப்பட்டு, வனவிலங்குகள் செல்லும் பகுதியில் மின் பாதைகளின் உயரம் அதிகரிக்கப்பட்டு உள்ளது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.