Courtesy: koormai
2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில், ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை பற்றிய நியாயப்படுத்தலை மறுதலிக்கக்கூடிய அரசியல் உத்திகள் நுட்பமாக வகுக்கப்பட்டு மறைமுகமாகவும் நேரடியாகவும் மெது மெதுவாகச் செயற்படுத்தப்பட்டு வரும் பின்னணியில், தமிழ்த்தேசியச் சிந்தனையை மேலும் மடைமாற்றக்கூடிய முறையில் சமயக் கோட்பாடுகள் மிகைப்படுத்தப்படுகின்றன.
இந்த இடத்தில் ஈழத்தமிழ் அறிஞர்களான கா.பொ.இரத்தினம், தனிநாயகம் அடிகளார் போன்றோர் வள்ளுவம் ஊடாகத் தமிழினத்தை ஒன்றுபடுத்த மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய மீள் பார்வை அவசியமாகிறது.
‘குறள் ஆய்வுச் செம்மல்’ ‘உலகத் தமிழர் செம்மல்’ ஆகிய பல பட்டங்களைப் பெற்ற ஈழத்தமிழ் அறிஞர் கா.பொ. இரத்தினம், வள்ளுவரை சமயங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று வரைவு செய்திருக்கின்றார்.
கடவுளுடைய சித்தாத்தங்கள், முனிவர்களின் கூற்றுகள் என்று சொல்லப்படும் வாக்குகளை மறுப்பின்றி ஏற்க வேண்டும். அதனை ஆராய்ந்து விமர்சித்தால், அல்லது பொருத்தமற்றது என்று இகழ்ந்தால் நரகத்திற்குச் செல்வீர்கள் என்று மக்களை அச்சுறுத்துகின்ற மலினப்பட்ட தரமற்ற கருத்துக்களும் நூல்களும் வெளிவரும் இக் காலத்தில் ‘உண்மைப் பொருளை ஆராய்ந்து அறிதல் வேண்டும் என்று வாதிட்டவர்தான் கா.பொ.இரத்தினம்.
குருட்டுத் தனமாக எதையும நம்புதல் கூடாது.
யார் கூற்றானாலும் ஆராயாமல் ஏற்றுக் கொள்ளப்படாது’ என்ற கருத்துடையவர்.
தை மாதம் முதலாம் திகதிதான் வள்ளுவர் ஆண்டு என்று தமிழ் நாட்டின் முத்தமிழ் வித்தகர் கீ.ஆ.பொ.விஸ்வநாதம், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அமரர் கருணாநிதி ஆகியோர் கருத்திட்டபோது, அதனை மறுத்துரைத்து ‘வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள், தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள்’ என்று நியாயப்படுத்திய கா.பொ.இரத்தினம், ஈழத் தமிழறிஞர் அருட்தந்தை தனிநாயகம் அடிகளாருடன் இணைந்து 1952 இல் தமிழ் மறைக் கழகத்தை கொழும்பில் உருவாக்கினார்.
தமிழ் நாட்டின் முத்தமிழ் வித்தகர் பேராசிரியர் க.நமசிவாய முதலியார் நிறுவிய திருநாட் கழகம் 1935 ஆம் ஆண்டு மே மாதம் பதினெட்டு, பத்தொன்பதாம் திகதிகளில் திருவள்ளுவர் திருநாளைக் கொண்டாடியது. தொடர்ச்சியாக முன்று ஆண்டுகள் இடம்பெற்றிருந்தாலும் பின்னர் அந்தக் கொண்டாட்ட முறைகள் செயலிழந்தன.
வள்ளுரை ஒரு சமயத்துக்குள் வரையறுப்பது, எழுபது வருடங்களுக்கும் மேலான தமிழ்தேசிய அரசியல் போராட்டத்துக்கும், க.பொ.இரத்தினம், தனிநாயகம் அடிகளார் போன்ற ஈழத்தமிழ் அறிஞர்களின் சிந்தனைகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி |
பல்வேறு வழிகளிலும் சிதறிக் கிடக்கும் தமிழர்கள், சமயங்களைக் கடந்து ஒருமித்த குரலில் ஒன்றிணைத்து வள்ளுவர் வழியில் வாழ வேண்டும் என்றும், அரசியல் உள்ளிட்ட பலதுறைகளிலும் ஒரே கருத்துடையவராக இருக்க வேண்டுமெனவும் நமசிவாய முதலியார் திருவள்ளுவர் நாள் கொண்டாட்டத்தில் நிகழ்த்திய உரையை, கா.பொ.இரத்தினம் 1952 இல் வெளியிட்ட ‘திருவள்ளுவர் நாள் மலர்’ என்ற நூலில் பதிவிட்டிருக்கிறார்.
வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள், தமிழினத்தை ஒன்றுபடுத்தும் நாள் என்ற க.பொ.இரத்தினத்தின் கோரிக்கையை குன்றக்குடி அடிகளார், டாக்டர். மா.இராசமாணிக்கனார், டாக்டர் மு.வரதராசன், அ.ச.ஞானசம்பந்தர், கி.வா. ஜெகன்நாதன் போன்ற பல்வேறு தமிழ் நாட்டுத் தமிழறிஞர்களும் அதனை ஏற்று வழிமொழிந்தனர்.
ஈழத்தமிழ் மெய்யியல் அறிஞர் பண்டிதமனி சி. கணபதிப்பிள்ளை ஆதரவு வெளியிட்டதை தமிழ் நாட்டு மற்றும் ஈழத்தமிழர் நாளிதழ்களும் பிரசுரித்திருந்தன. கா.பொ.இரத்தினத்தின் முயற்சியை குமுதம், ஆனந்தவிகடன் போன்ற சஞ்சிகைகளும் பாராட்டியிருந்தன.
வள்ளுவர் பொதுமறை என்ற தனிநாயகம் அடிகளாரின் வாதத்தை தமிழக சஞ்சிகைகள் முதன்மைப்படுத்தியிருந்தன.
சென்னை மயிலாப்பூரில் திருவள்ளுவர் கோயில் ஒன்று உள்ளது. ‘இன்றும் அவ்விலுப்பை மரமும், அவர் தோன்றிய குடிலின் அடையாளமாக அம்மரத்தின் அருகே அவரது திருவுருவம் நிறுத்திய திருக்கோயில் ஒன்றும் திருமயிலையில் இருக்கின்றது’ என்று மறைமலை அடிகளார் கூறுகிறார்.
இதனை அடியொற்றியதாகவே வைகாசி அனுடம் என்பதை “திருவள்ளுவர் நாள் மலர்” என்ற நூல் விபரிக்கின்றது.
1837 இல் திருத்தணிகைச் சரவணப்பெருமாள் ஐயர் பதிப்பித்த திருக்குறள் பதிப்பில் இக்கோயிலைப் பற்றிய குறிப்புக் காணப்படுவதாக தேவப்பிரியராஜ் அக்ரிவேற்போட் ((devapriyaji.activeboard.com)) என்ற ஆய்வுத்தளம் கூறுகின்றது.
இருநூற்று முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாவட்ட ஆட்சியாளராக இருந்த ‘வைட் எல்லீஸ்’ என்பவர் இந்தக் கோயிலைப் பற்றி விளக்கியுள்ளார்.
இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பு இத் திருக்கோயில் தோன்றியிருக்கலாம். என்பதும், சடாமுடியுடன் கூடிய சிதைந்த திருவுருவம் திருவள்ளுவருடையதுதான் என்றும் தொல்லியல் ஆய்வறிஞரான இராமச்சந்திரன் கூறுவதாகவும் இந்த ஆய்வுத் தளம் விபரிக்கிறது.
இத்திருவள்ளுவர் கோயிலில், திருவள்ளுவர் அவதார நாளாக வைகாசி அனுடமும் அவர் காலம் ஆகிய நாளாக மாசி உத்தரமும் கடைப்பிடிக்கின்றன. அதற்கான பூசைகள் நடைப்பெற்று வருவதாகவும் கூறப்பட்டிருக்கின்றன.
வைகாசி அனுடத்தை வள்ளுவர் கொண்டாடியதாகத் திருவள்ளுவரின் வீட்டில் இருந்த பழைய குறிப்புப் புத்தகம் ஒன்றில் இருந்து கண்டறியப்பட்டதாகவும், அதன் காரணமாகவே நமசிவாய முதலியாரும் அதன் பின்னர் வந்த கா.பொ.இரத்தினம் போன்றோரும் தமிழ் இனத்தை ஒன்றுபடுத்தும் நோக்கில் ‘வைகாசி அனுடம் வள்ளுவர் திருநாள்’ என்று பிரகடணப்படுத்திக் கொண்டாடியிருக்கின்றனர் என்பதையும் அறிய முடிகின்றது.
பிரான்சிஸ் வைட் எல்லீஸ் என்பவரே திருக்குறளை முதன் முதலில் அச்சுவடிவில் பதிப்பித்து ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார். சித்த மருத்துவர் அயோத்திதாசனின் பாட்டனார் பட்லர் கந்தப்பன், எல்லீஸிடம் அந்த ஓலைச் சுவடிகளைக் கையளித்திருக்கிறார்.
திருவள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அதே காலகட்டத்தில்தான் ‘குந்தக் குந்தர்’ என்னும் சமண முனிவர் வாழ்ந்ததாகக் கூறப்படுவதாலும், தங்கக் காசு ஒன்றில் வள்ளுவர் உருவம் பொறிக்கப்பட்ட முறை பற்றி எல்லீஸ் கூறிய தகவலையும் மையமாகக் கொண்டே வள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்று பிற்காலத்தில் விவாதிக்கப்படுகின்றது. வள்ளுவர் சமணத்தைப் பின்பற்றியிருக்கலாம். ஆனால் எந்த ஒரு சமயம் பற்றியும் அவர் தனது குறளில் குறிப்பிட்டுக் கூறவில்லை. |
அதன் பின்னர் பொலிடன் (Bodleian) என்ற நூலகத்தில் வைத்து ஜூ.யூ போப் என்ற தத்துவப்போதகர் சுவாமிகள் பாதுகாக்கிறார். பிற்காலததில்; பேராசிரியார் மருதநாயகம், எல்லீஸின் கையெழுத்துப் பிரதிகளில் உள்ள தகவல்களை மேலும் விரிவாக ஆரய்ந்து எல்லீஸின் திருக்குறள் விளக்கக் கையெழுத்துப் பிரதி (The Ellis Mamuscript) என்ற நூலிலாக வெளியிட்டுள்ளார்.
திருக்குறள் பற்றிய எல்லீஸின் ஆங்கில மொழிபெயர்ப்பு 1812 அல்லது 1819 இல் வெளிவந்திருக்க வேண்டும். அது பற்றிய சரியான தகவல்கள் இல்லை. லன்டன் அருங்காட்சி நூலகத்தில் இருந்த தமிழ் நூல்களுக்கான அட்டவனைகளை 1909 இல் ஜூயூ போப் உருவாக்கியதன் மூலம் அது பற்றிய தகவல்களை அறிய முடிகின்றது.
எல்லீஸ் பற்றிய தகவல்களை வெளியிட்ட சென்னைப் பல்கலைக்கழகம் பல தகவல்களை மூடி மறைததிருப்பதாக தமிழ் நாடு தகவல் திரட்டு என்ற நூலில் தமிழ்த்தேசியர் கவலை வெளியிட்டுள்ளார்.
முந்நூற்று நான்கு குறளுக்கு உரை எழுதும்போது முந்நூற்றுக்கும் அதிகமான நூல்களில் இருந்து விளக்கவுரைகளை எல்லீஸ் மேற்கோள் காட்டியுள்ளார் என்றும் அவற்றில் அறுபத்து மூன்று தமிழ் நூல்கள் எனவும் தமிழ்த்தேசியர் விபரிக்கிறார்.
பரிமேலழகர் ஓலையில் எழுதியிருந்த விளக்கவுரையையும் எல்லீஸ் வாசித்திருக்கிறார்.
நச்சினார்க்கினியர் கூட மொழிசார்ந்த எண்பது நூல்களை மாத்திரமே வாசித்து குறளுக்கு விளக்கவுரை எழுதியுள்ள நிலையில், ஆங்கிலேயரான எல்லீஸ் முந்நூறு நூல்களை வாசித்து விளக்கம் எழுதியிருக்கிறார் என்றால், அவரின் தமிழ்மொழி பற்றின் ஆழத்தைப் புரிந்துகொள்ள முடியும்.
தமிழ் – தமிழ் மொழி ஒன்றைத்தவிர திராவிடம் என்ற இனக்குழுமம் இருப்பதாக எல்லீஸ் எங்கும் காண்பிக்கவில்லை என தமிழ்த் தகவல் திரட்டில் தமிழ்த்தேசியர் கூறுகிறார்.
பிராமணிய ஆதிக்கம் பற்றிய தகவல்களும் எல்லீஸின் கருத்தில் கசிந்திருந்ததால், பார்ப்பானிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை உப வேந்தராகக் கொண்ட சென்னைப் பல்கலைக்கழகம் எல்லீஸ் தமிழுக்கு ஆற்றிய பணிகள் பற்றிய விபரங்களை மூடி மறைத்திருக்க வேண்டும் என்றும் தமிழ்த்தேசியர் வெளிப்படுத்துகிறார்.
1796 இல் எல்லீஸ் கிழக்கிந்திய கம்பனியின் ஊழியராக சென்னை நகரத்துக்கு வருவதற்கு முன்னர் 1794 இல் கின்டர்ஸ்லே என்பவரால் எழுதிவெளியிடப்பட்ட ஸ்பேசிமன்ற் ஒப் கின்டோ லிற்றர்ஜர் (Specimens of Hindoo Literature) எனும் நூலில் திருவள்ளுவர் பெயர் இடம்பெற்றுள்ளது. சில குறள்களுக்கு ஆங்கில விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
திருக்குறளுக்கு முழுமையான உரையினை எழுதி முடிப்பதற்கு முன்னரே எல்லீஸ் 1819 இல் காலமாகிவிட்டார். எல்லீஸ் சேகரித்த பல ஓலைகளும் அவர் எழுதிய பல கட்டுரைகளும் அவருடைய சமையல்காரரின் கவனக்குறைவால் தீயில் கருகி முற்றாக அழிக்கப்பட்டுள்ளதாகவே வால்டர் எலியட் என்ற ஆய்வாளர் குறிப்பிட்டிருக்கிறார்.
அதாவது Entirely lost and Destroyed என்று அவர் ஆங்கிலத்தில் கூறுகிறார்.
எல்லீஸ் எழுதிய கட்டுரைகளின் பிரகாரம் வள்ளுவரை சமண சயமத்தவர் என்பதையும் அறியமுடியும்.
தோமஸ் துரைரெட்ணம் என்ற ஆய்வாளர் ஆங்கிலத்தில் வெளியிட்ட (Languages and Nations – Conversations in Colonial South India) என்ற நூல் திராவிடம் பற்றிய ஆய்வாக இருந்தாலும், வள்ளுவர் மற்றும் எல்லீஸ் பற்றிய தகவல்களும் காணப்படுகின்றன.
திராவிடம் என்ற இனக்குழுமம் இல்லை என்ற எல்லீஸின் கருத்தை இந் நூல் மறுக்கும் தொனி ஆங்கில மொழியில் புரிகிறது.
பன்னிரெண்டாம் நூற்றாண்டில்தான் முதன் முதலில் பரிமேலழகர் ஓலை மூலம் உரை எழுதியிருக்கிறார். ஓலையில் எழுதப்பட்ட பரிமேலழகர் உரைகளை அக்கால மடங்களும் ஆதினங்களும் பாதுகாத்திருந்தன.
அதன் பின்னர் பிரித்தானியர் ஆட்சிக்காலத்திலேதான் எல்லீஸ் சென்னை நகரின் ஆட்சியாளராக இருந்தபோது இந்த ஓலைச் சுவடிகளைப் பெற்று ஆங்கிலத்தில் அச்சிட்டிருக்கிறார்.
கி.பி. பதின்நான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் வடிவமைக்கப்பட்டிருந்த வள்ளுவர் சிலை ஒன்று கண்டெடுக்கப்பட்டதாக தமிழ்நாடு அரச தொல்லியல் துறை ஆய்வாளர் சா.கிருஷ்ணமூர்த்தி 1950 களில் குறிப்பிட்டிருந்தார்.
பதின்நான்கு, பதினைந்தாம் நூற்றாண்டுகளில் வெளியான தமிழ் இலக்கியப் படைப்புகள் பலவற்றில் சைவ சமயக் கருத்துக்கள் இருந்தன.
ஆனால் திருவள்ளுவர் மயிலாப்பூரில் வாழ்ந்ததாகச் சொல்லப்படும் அதே காலகட்டத்தில்தான் ‘குந்தக் குந்தர்’ என்னும் சமண முனிவர் வாழ்ந்ததாகக் கூறப்படுவதாலும், தங்கக் காசு ஒன்றில் வள்ளுவர் உருவம் பொறிக்கப்பட்ட முறை பற்றி எல்லீஸ் கூறிய தகவல்களையும் மையமாகக் கொண்டே வள்ளுவர் சமண சமயத்தைச் சேர்ந்தவர் என்று பிற்காலத்தில் விவாதிக்கப்படுகின்றது.
ஆகவே வள்ளுவர் ஒரு சமயத்தைப் பின்பற்றியிருக்கலாம் என்பது உண்மை. சமணர்கள் பிற்காலத்தில் சைவர்களாக மாறினர் என்பதும் ஏற்புடையது.
அரசியல், ஆட்சிமுறை அதற்கான சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், நிர்வாகம் மற்றும் மனித வாழ்வின் மகத்துவங்கள் பற்றியெல்லாம் குறள் இனமத வேறுபாடுகள் இன்றி உலகத்துக்குப் போதித்திருக்கிறது. உலகில் பலதுறைகளுக்குமான மெய்யியலை (Philosophy) குறள் படைத்திருக்கிறது. |
ஆனால் எந்த ஒரு சமயம் பற்றியும் வள்ளுவர் தனது குறளில் குறிப்பிட்டுக் கூறவில்லை. ஆனால் தமிழ் நாடு மற்றும் ஈழத்தமிழர் பிரதேசங்களில் வாழும் இக்கால சமய அறிஞர்கள் சிலர் தத்தமது விருப்பங்கள் தேவைகளுக்கு ஏற்ப வள்ளுவருக்குச் சமய அடையாளமிடுகின்றனர்.
அரசியல், ஆட்சிமுறை அதற்கான சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், நிர்வாகம் மற்றும் மனித வாழ்வின் மகத்துவங்கள் பற்றியெல்லாம் குறள் இனமத வேறுபாடுகள் இன்றி உலகத்துக்குப் போதித்திருக்கிறது.
உலகில் பலதுறைகளுக்குமான மெய்யியலை (Philosophy) குறள் படைத்திருக்கிறது.
சங்ககாலத்திலும் சங்கமருவிய காலத்திலும் எழுந்த தமிழ் இலக்கியங்கள் வள்ளுவரின் நீதிக் கருத்துக்களுக்களை மையப்படுத்தியிருக்கின்றன. ஆனால் எந்த ஒரு இலக்கியப் படைப்புகளும் சமய அடையாளங்களை வள்ளுவருக்குக் கொடுக்கவில்லை.
சைவ சமயம் ஊடாக வள்ளுவரைப் பார்க்கவுமில்லை.
இப் பின்புலத்தில் கா.பொ.இரத்தினம் முன்வைத்த ‘வைகாசி அனுடம் திருவள்ளுவர் நாள்’ என்ற பிரகடணம் தமிழ்நாடு, இலங்கை, பர்மா, சிங்கப்பூர், மலேசியா மாத்திரமன்றி, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் தொடச்சியாகக் கொண்டாடப்பட்டிருக்கிறன.
இதற்கான சான்றுகளைக் கொழும்புத் தமிழ்ச் சங்க ஆண்டறிக்கைகளில் காணலாம். கா.பொ.இரத்தினம் 1958-1959 ஆம் ஆண்டுகளில் சங்கத்தின் தலைவராகப் பணிபுரிந்தார்.
கலைஞர் கருணாநிதி, கீ.ஆ.பொ.விஸ்வநாதம் ஆகியோர் தை மாதம் முதலாம் திகதி அதாவது தைப்பொங்கலை தமிழர் திருநாள் என்று நியாபப்படுத்தி அன்றைய தினம் வள்ளுவர் நாளைக் கொண்டாட வேண்டுமெனக் கருத்திட்டமைக்கு, கா.பொ.இரத்தினம் பகிரங்கமாக வெளியிட்ட எதிர்க் கருத்துக்களை தேவப்பிரியராஜ் அக்ரிவேற்போட் என்ற தமிழ் ஆய்வுத் தளம் நியாயப்படுத்தியுள்ளது.
மதம் சாராதது என்பதால் தைப்பொங்கலை ‘தமிழர் திருநாள்’ என்ற பெயரில் முன்வைத்தார்கள் என்று ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் அந்த நாள் தமிழர்களுக்கு மட்டுமே உரியதல்ல.
இமாச்சல – உத்தர பிரதேசப் பகுதிகளில் ‘லோஹ்ரி’, வங்கத்தில் ‘கங்கா சாகர் மேளா’, பஞ்சாபில் ‘மகி’, தெலுங்கு – கன்னட நிலங்களில் ‘மகர சங்கிராந்தி’ என்றெல்லாம் கொண்டாடப்படும் தை முதலாம் திகதியை, எப்படி தமிழருக்கே மட்டும் தனித்துவமான ஒரு நாள் என்று சொல்லமுடியும் என்ற கேள்வியை அந்த ஆய்வுத்தளம் எழுப்பியிருக்கிறது.
இதனால் ஈழத்தமிழ் அறிஞரான கா.பொ.இரத்தினம் பாராட்டுக்குரியவர். அவர் பரிந்துரைத்த ‘வைகாசி அனுடம் திருவள்ளுவர் நாள்’ என்பதை உலகம் எங்கும் நிலை நிறுத்த வேண்டுமென 2018 யூலை மாதம் வெளியிட்ட அந்த ஆய்வில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது.
குறள் சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்ட நீதி நூல் என்று தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய “திருக்குறள் காட்டும் நல்வாழ்வு” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் விபரித்திருக்கிறார். |
கா.பொ.இரத்தினம் உலகத் திருக்குறள் மன்றத் தலைவராகப் பதவி வகித்திருந்தபோது கொழும்புத் தமிழ்ச் சங்கம் 2000 ஆம் ஆண்டு திருக்குறள் மாநாட்டை நடத்தியிருந்தது.
மாநாட்டு மலருக்கு ஆசிச் செய்தி வங்கிய இராமகிருஷ்ண மிசன் வெள்ளவத்தைக் கிளையின் தலைவர் சுவாமி ஆத்மகணாநந்தஜீ ‘மக்கள் சமயங்களை வெறும் தத்துவங்களாகவும் சடங்குகளாகவும் மாத்திரமே கடைப்பித்து வருகின்றனர். இதனால் சமயங்களோடு இணக்கப்பாட்டைக் காண முடியாது வேற்றுமை உணர்வுகளிலேயே மக்கள் மூழ்கியுள்ளனர்.
ஆகவே அமைதியற்ற நிலைமை தோன்றியுள்ளது’ என்று கவலை வெளியிட்டிருந்தார்.
‘குறள் சாதி சமயங்களுக்கு அப்பாற்பட்ட நீதி நூல் என்று தங்கம்மா அப்பாக்குட்டி எழுதிய “திருக்குறள் காட்டும் நல்வாழ்வு” என்ற தலைப்பில் மலரில் எழுதிய கட்டுரையில் விபரித்திருக்கிறார்.
ஆகவே ஈழத்தமிழ் அறிஞர்கள் பலரின் வள்ளுவர் பற்றிய பார்வையும், 2009 மே மாதத்திற்குப் பின்னரான அரசியல் சூழலில் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை, வள்ளுவரின் அரசியல் அறம் பற்றிய மெய்யியல் முறைமைகளுக்கு ஏற்ப எப்படி நிறுவலாம் என்பது குறித்தும் சிந்திக்க வேண்டிய காலகட்டமிது.
அரசறிவியல் பற்றிய மேலைத்தேயக் கோட்பாடுகளை விடவும் திருக்குறள், அரசு – சமூகம் மற்றும் சட்டம் – நீதி, பொருளியல் போன்ற துறைசார்ந்த விவகாரங்களை நுட்பமாகக் கையாளக் கூடிய மெய்யியல் வழிகளைத் தந்துள்ளது.
இப்பின்புலத்தில், ஈழத் தமிழர் பிரதேசங்களில் சமய அடையாளங்கள் அதுவும் சைவ சமய அடையாளங்கள், தமிழ் இலக்கிய வரலாறுகள் – சான்றுகள், பண்பாடுகள், தமிழர் மரபுரிமைகள் பேணப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
ஆனால் வள்ளுரை ஒரு சமயத்துக்குள் வரையறுப்பது, எழுபது வருடங்களுக்கும் மேலான தமிழ்தேசிய அரசியல் போராட்டத்துக்கும், கா.பொ.இரத்தினம், தனிநாயகம் அடிகளார் போன்ற ஈழத்தமிழ் அறிஞர்களின் சிந்தனைகளுக்கும் இழைக்கப்படும் பெரும் அநீதி.
‘வள்ளுவம் ஒரு உலகப் பொதுமறை’ என்ற கருத்தியல் நீக்கத்துக்கான உந்துதலாகவும் இதனை நோக்க வேண்டும்.
பௌத்த தேசிய திணிப்பை எதிர்ப்பதற்காக மோடியின் இந்துத்துவக் கொள்கைக்குப் பின்னால் செல்வது அல்லது நம்புவது பட்டறிவற்ற புத்தி.