வார்டு மறுவரையறை: ஓபிஎஸ் வைத்த கோரிக்கை, உறுதி அளித்த கே.என்.நேரு

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வார்டு மறு வரையறை தொடர்பான கேள்விகளுக்கு அமைச்சர்

பதிலளித்து பேசினார்.

வார்டு மறு வரையறை வேண்டும்!

அப்போது கேள்வி பதில் நேரத்தில் அமைச்சர்கள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பதிலளித்து வருகின்றனர். அந்தவகையில், இன்று சட்டப்பேரவையில் கேள்வி பதில் நேரத்தில், திருச்செங்கோடு நகராட்சிக்குட்பட்ட வார்டு எல்லைகளை மறு வரையறை செய்ய தமிழக அரசு முன்வருமா என ஈஸ்வரன் கேள்வி எழுப்பினார்.

குழு அமைத்து நடவடிக்கை!

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கேஎன் நேரு, “தமிழ்நாடு முழுவதும் நகராட்சி, பேரூராட்சி மாநகராட்சிகளில் ஒரே சீராக வார்டு மறுவரையறை செய்யப்படும். வார்டு மறுவரையறை தொடர்பாக அதிகாரிகளில் குழு அமைத்து அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்” என அறிவித்தார்.

வைத்த கோரிக்கை!

அப்போது பேசிய ஓ.பன்னீர்செல்வம், “கணவர் ஒரு வார்டிலும் மனைவி ஒரு வார்டிலும் தந்தை ஒரு வார்டிலும் மகன் ஒரு வார்டிலும் இருக்கின்ற குழ்நிலை இருக்கிறது. ஆகவே இதனையும் கவனத்தில் கொண்டு, கூட்டுக் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஒரே வார்டில் வாக்குப் பதிவு செய்யும்படி வழிவகை செய்ய வேண்டும்.

அதேபோல், ஒரு வார்டில் உள்ள பகுதிகள் அனைத்தும் அதே வார்டில் இருக்க வேண்டும். ஒரு வார்டின் சில பகுதிகள் வேறு வார்டில் இருப்பதால் வாக்காளர்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதன் காரணமாக இதனையும் சரி செய்து தர வேண்டும்” என்றார்.

இடையில் புகுந்த அப்பாவு!

அதற்கு அமைச்சரை பதில் சொல்ல அழைப்பதற்கு முன்பாக பேசிய சபாநாயகர் அப்பாவு, “கணவன் ஒரு இடத்திலும் மனைவி ஒரு இடத்திலும் இருந்தால் அது பெயர் குடும்பம் இல்லையே, வாக்காளர் பட்டியலில் அப்படி இருக்கும், வார்டு மறுவரையறையில் அப்படி இருக்காது என நான் நினைக்கிறேன். குடும்பம் என்றால் சேர்ந்திருப்பது தான்” என்றார்.

பிரிந்து நிற்பதில் இப்படி ஒரு ஏற்பாடா?

ஓபிஎஸ் கருத்துக்கு விளக்கம் அளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “ஒரு ஊரில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் இருப்பார் என்றால், இவர் ஒரு வார்டில் இருந்துகொண்டு அவரது மனைவி வேறு வார்டில் நின்று வெற்றி பெறலாம் எனும் காரணத்தினால் பிரித்து வைத்துக்கொள்கிறார்கள். இப்படி இருக்கக் கூடாது என் முன்னாள் முதலமைச்சர் கேட்டுள்ளார்.

உங்க ஆட்சி காலத்தில் தான் இப்படி நடந்தது!

உங்கள் (அதிமுக) காலத்தில் தான் அது உருவாக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்தீர்கள். இவற்றையெல்லாம் சீர் செய்யவே என்னுடைய துறை, ஐ.பெரியசாயியின் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைவரையும் ஒன்றிணைத்து கமிட்டி ஒன்று உருவாக்கப்பட்டது.

அமைச்சர் கே.என்.நேரு கொடுத்த உறுதி!

ஆனால், நீதிமன்றம் உத்தரவிட்ட காரணத்தால் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே உறுப்பினர் (ஓ.பி.எஸ்.) சொன்னது நல்ல கருத்து. அதனை நிச்சயம் கமிட்டியில் சொல்லி சீர் செய்யப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.