மதுரை: விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனிடையே மேலும் பல படங்களில் நடித்து வரும் விஜய் சேதுபதி, புதிதாக வெப் சீரிஸில் கமிட் ஆகியுள்ளார்.
சமீபத்தில் தான் அவர் இந்தியில் நடித்த ஃபார்ஸி வெப் சீரிஸ் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் முதல் தமிழ் வெப் சீரிஸ்ஸின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது.
வெப் சீரிஸில் விஜய் சேதுபதி
தமிழில் மட்டும் நடித்து வந்த விஜய் சேதுபதி தற்போது டோலிவுட், பாலிவுட் என பான் இந்தியா ஸ்டாராக கலக்கி வருகிறார். திரைப்படங்கள் மட்டுமின்றி வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் விஜய் சேதுபதி, ஷாகித் கபூர், ராஷி கண்ணா நடித்த ஃபார்ஸி வெப் சீரிஸ் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இந்தியில் ராஜ் & டிகே இயக்கிய இந்த வெப் சீரிஸ், தமிழ் உட்பட மற்ற மொழிகளிலும் டப் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
முதல் தமிழ் வெப் சீரிஸ்
வெப் சீரிஸ் மூலம் ஓடிடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள விஜய் சேதுபதி, தற்போது தமிழ் வெப் சீரிஸிலும் நடிக்க உள்ளார். விஜய் சேதுபதியின் முதல் தமிழ் வெப் சீரிஸ்ஸான இதனை மணிகண்டன் இயக்குகிறார். காக்கா முட்டை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்கள் மூலம் பிரபலமானவர் இயக்குநர் மணிகண்டன். விஜய் சேதுபதி – மணிகண்டன் காம்போ ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி படங்களுக்குப் பிற்கு மீண்டும் இணைவது குறிப்பிடத்தக்கது.
பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு
மணிகண்டன் இயக்கத்தில் இறுதியாக வெளியான கடைசி விவசாயி படத்தை விஜய் சேதுபதி தான் தயாரித்து இருந்தார். இந்நிலையில், தற்போது இவர்கள் இணையும் வெப் சீரிஸை டிஸ்னி ப்ளஸ் ஓடிடி தளம் தயாரிக்கிறது. இதனையடுத்து இந்த வெப் சீரிஸ்ஸின் படப்பிடிப்பு மதுரையை அடுத்த உசிலம்பட்டியில் பூஜையுடன் தொடங்கியது. இதில், இயக்குநர் மணிகண்டனுடன் விஜய் சேதுபதியும் கலந்துகொண்டார்.
விரைவில் புதிய அப்டேட்
இன்னும் டைட்டில் கன்ஃபார்ம் ஆகாத இந்த வெப் சீரிஸ்ஸின் முதற்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜேஷ் முருகேசன் இசையமைக்கும் இந்த தொடருக்கு, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்கிறார். இவர்கள் தவிர இந்த வெப் சீரிஸில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் இந்தாண்டு இறுதிக்குள் இந்த வெப் சீரிஸ்ஸை வெளியிட இயக்குநர் மணிகண்டன் திட்டமிட்டுள்ளாராம். விஜய் சேதுபதி முதன்முறையாக தமிழ் வெப் சீரிஸ்ஸில் நடிப்பது ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.