Viral Video: சென்னை ரோகிணி திரையரங்கத்தில் நரிக்குறவ சமூகத்தினரை படம் பார்க்க அனுமதி மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தற்போது அந்த பரபரப்பு அடங்குவதற்குள் சென்னையில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது.
சென்னை விருகம்பாக்கத்தின் வணிக வளாகத்தில் உள்ள திரையரங்கம் ஒன்றில் ‘விடுதலை’ படம் பார்க்க 7 வயது குழந்தைகளுடன் வந்தவர்களுக்கு நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. அதாவது, 18 வயதிற்குட்பட்டோருக்கு அனுமதியில்லாத ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்ற விடுதலை படத்தை, குழந்தைகளுடன் பார்த்த ரசிகரிடம், திரையரங்க நிர்வாகம் காவல்துறையை அழைத்து வந்து வெளியேறும்படி கூறியுள்ளது.
வைரலான வீடியோ:
அப்போது தொடங்கும் அந்த வீடியோவில் தன்னை வழக்கறிஞர் என கூறும் பெண்,”பல பேர் இந்த படத்தை, பல குடும்பங்கள் குழந்தைகளுடன் வந்து பார்க்கின்றனர். பெற்றோர்களுக்கு தெரியாதா குழந்தைகள் இந்த படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்று.
முகநூலில் வளர்மதி விளக்கம்
இந்த படத்தின் கதை, பின்னணி என அனைத்தும் தெரிந்துதான் படத்தை பார்க்க அழைத்து வந்துள்ளோம். இந்த படத்தில் அடிதடி, சண்டை உள்ளிட்ட வன்முறை உள்ளது உண்மைதான். அறைகுறை ஆடையுடன் பெண்களை இழிவாக காட்டும் திரைப்படங்களை குழந்தைகளுடன் பார்க்கும் அனுமதிக்கும் நீங்கள், மக்களின் வலிகளை பேசும் இந்த படத்தை பார்க்க அனுமதிக்க மாட்டீர்களா” என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், திரையரங்க நிர்வாகத்தினர் தங்களை அச்சுறுத்தம் வகையில் பேசியதாகவும், அனுமதியின்றி குழந்தையை புகைப்படம் எடுத்துச்சென்றதாகவும் அந்த பெண்மணி குற்றச்சாட்டினார். இதையடுத்து, அந்த வீடியோவில் இருந்த பெண், வழக்கறிஞர் வளர்மதி என தெரியவந்தது.
‘மரியாதையின்றி பேசிய நிர்வாகம்’
நமது ஜீ தமிழ் நியூஸ் ஊடகம் வழக்கறிஞர் வளர்மதியை தொடர்புக்கொண்டு சம்பவம் குறித்த கேட்டபோது,”நேற்றிரவு விடுதலை படம் பார்க்க விருகம்பாக்கம் ஐநாக்ஸ் திரையரங்கத்திற்கு சென்றிருந்தோம். 7 வயது குழந்தையுடன் வந்ததால் உள்ளே அனுமதிக்க மறுத்தனர். தொடர்ந்து, நான் அவர்களிடம் அனுமதி கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால், ஒருகட்டத்தில் அவர்கள் மரியாதையின்றி பேசினர்.
அவர்கள் அனுமதிக்க மறுத்தும் நாங்கள் படம் பார்க்க இருக்கையில் சென்று அமர்ந்தோம். அப்போது, நிர்வாகம் தரப்பில் இருந்து வந்த சிலர் எங்கள் அனுமதியின்றி குழந்தையை புகைப்படம் எடுத்தனர். அதுகுறித்து கேட்டதற்கு, காவல் ஆணையருக்கு அனுப்பவதற்காக எடுத்தோம் என அவர்களிடம் மீண்டும் அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் பேசியுள்ளனர்.
‘பொதுமக்கள் ஆதரவு’
படத்தை 10 நிமிடம் தாமதாக திரையிடப்பட்டது தொடர்ந்து, பாதிலேயே படத்தை நிறுத்தி விட்டு திரையரங்க நிர்வாகத்தினர் போலீசாரை திரையரங்கின் உள்ளேயே அழைத்து வந்து எங்களிடம் விசாரித்தனர். தொடர்ந்து, பல குடும்பங்கள் குழந்தைகளுடன் தான் வந்திருந்தனர். நிர்வாகத்தினரின் இந்த செயலை படம் பார்த்துக்கொண்டிருந்த பெரும்பான்மையான பொதுமக்கள் எதிர்த்துக் கேள்விக்கேட்டனர். மக்கள் அனைவருக்கும் எங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த பின்னரே, காவல்துறையினரும், திரையரங்க நிர்வாகத்தினரும் அங்கிருந்து சென்றனர். மீண்டும் படத்தை திரையிட்டார்கள், படத்தை முழுமையாக பார்த்துவிட்டு வந்துவிட்டோம்” என்றார்.
ரோகிணி தியேட்டர் சம்பவத்திற்கு பின்…
படம் ‘ஏ’ தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ளதே என நாம் கேள்வி எழுப்பியதற்கு அவர்,”படத்தின் கதை, பின்னணி அனைத்தும் எங்களுக்கு தெரியும். இந்த படத்தை குழந்தை பார்க்க வேண்டும் என்பதால் அழைத்துச்சென்றோம். இதே படம், ஓடிடியிலும் இதே காட்சிகளுடன்தான் வெளிவரும், அப்போது மட்டும் குழந்தைகள் பார்க்கலாமா. பெண்களை இழிவாக காட்டும் காட்சிகள் உள்ள படத்தை பார்க்கலாம், இதை பார்க்க் கூடாதா. இவை அனைத்தும் ரோகிணி திரையரங்க சம்பவத்திற்காக இவர்கள் ஈகோவில் செய்வதுதான் இது” என பதிலளித்தார். மேலும், ரோகிணி திரையரங்க சம்பவதற்கு பின்னர்தான், திரையரங்க உரிமையாளர்கள் இத்தகைய செயலில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.
குழந்தையின் மனநிலை
தொடர்ந்து, படத்தை பார்த்த சிறுமியின் மனநிலை குறித்து கேட்டதற்கு,”அவர் நன்றாக மகிழ்ச்சியுடன் தான் படம் பார்த்தார். இது அவருக்கு புதிதொன்றும் இல்லை. மேலும், இவர்கள் சொல்வது போன்று விடுதலை படத்தில் அது போன்ற காட்சிகள் எதுவுமில்லை. காவல்துறையின் அராஜகத்தை மட்டுமே விடுதலை திரைப்படத்தில் காட்டியுள்ளனர். தணிக்கை சான்றிதழ் வழங்கும் முறையில்தான் இங்கு பிரச்னை” என விளக்கமளித்திருந்தார்.
கிளம்பிய விவாதம்
இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, பெரும் விவாதமே கிளம்பியுள்ளது. அதாவது, ‘ஏ’ சான்றிதழ் கொடுத்த படத்திற்கு குழந்தைகளுடன் பார்க்கச் சென்றது தவறுதான் என ஒருதரப்பு கூறுகிறது. இருப்பினும், விடுதலை படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்தது அவர்களின் தவறு, இது குழந்தைகளுடன் குடும்பமாக பார்க்க வேண்டிய படம்தான் எனவும் மற்றொரு தரப்பினர் கருத்து தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.