சென்னை: வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.
சூரி, விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, கெளதம் மேனன், சேத்தன், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதனையடுத்து விடுதலை படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் தரமான பரிசு கொடுத்து பாராட்டியுள்ளார்.
உதவி இயக்குநர்கள், நடிகர்கள், டெக்னீஷியன்களுக்கு வெற்றிமாறன் பரிசு கொடுத்த வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.
வெற்றிமாறனின் விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடித்துள்ள விடுதலை படத்தின் முதல் பாகம் நேற்று வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்ததுடன், பாசிட்டிவான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இதனால் இயக்குநர் வெற்றிமாறன் உட்பட விடுதலை படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.
படக்குழுவினருக்கு அன்புப் பரிசு
தொடர்ந்து விடுதலை படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த வெற்றியை தனது படக்குழுவினருடன் கொண்டாடியுள்ளார் வெற்றிமாறன். அதன்படி, படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், பணியாற்றிய உதவி இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தங்கக் காசு பரிசளித்துள்ளார். வெற்றிமாறன் தங்கக் காசு பரிசளித்த இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உதவி இயக்குநர்களுக்கு நிலம்
விடுதலை படம் பார்த்த ரசிகர்கள் ஒட்டு மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வெற்றிமாறன் உள்ளிட்ட அனைவருமே உயிரைக் கொடுத்து உழைத்துள்ளது திரையில் பார்க்கும்போது பிரமிப்பை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்தனர். அதன்படி தற்போது விடுதலை படக்குழுவினருக்கு தங்கக் காசு பரிசளித்துள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். முன்னதாக தனது உதவி இயக்குநர்களுக்கு நிலம் வாங்கிக் கொடுத்திருந்தார்.
ரசிகர்கள் பாராட்டு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் தன்னிடம் பணியாற்றும் 25 உதவி இயக்குநர்களுக்கு ஒரு கிரவுண்ட் இடம் வாங்கிக் கொடுத்துள்ளாராம். முக்கியமாக அந்த நிலத்தை ஒருபோதும் விற்கக் கூடாது என வெற்றிமாறன் அன்புக் கட்டளையும் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. உதவி இயக்குநர்களுக்கு பைக், கார் போன்றவை வாங்கிக் கொடுக்காமல் நிலம் கொடுத்தது பலரது கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.