மும்பை: விதவை மறுமணமென்பது சமூகம் விலக்கி வைக்க வேண்டிய விஷயமல்ல. மறுமணம் செய்துகொண்டதாலேயே ஒரு பெண்ணுக்கு அவரது கணவரின் விபத்திற்கான இழப்பீட்டுப் பணத்தை தர மறுப்பதும் சரியல்ல என்று மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2010-ல் விபத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் இன்சூரன்ஸ் பணத்தைக் கோரியிருந்தார். ஆனால், அவர் இடையில் மறுமணம் செய்துகொண்ட காரணத்தைக் கூறி சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனம் இழப்பீட்டை மறுத்தது. இதனை எதிர்த்து அப்பெண் தொடர்ந்த வழக்கில் மும்பை நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியுள்ளது.
2010-ல் நடந்த விபத்து: கடந்த 2010-ஆம் ஆண்டு மே மாதம் 19 வயது இளம்பெண்ணின் கணவர் கணேஷ் இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பின்னிருக்கையில் மனைவி அமர்ந்திருக்க கணேஷ், மும்பை – புனே நெடுஞ்சாலையைக் கடந்து காம்ஷெட் பகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது ஒரு ஆட்டோ மோதியது. இதில் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கணேஷ் உயிருடன் இருந்தபோது இஃப்கோ டோக்கியோ இன்சூரன்ஸ் கம்பெனியில் காப்பீடு செய்திருந்தார். இதனால் அவரது மனைவி அந்த இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் தனது கணவர் விபத்தில் இறந்ததற்கான இழப்பீட்டுத் தொகையைத் தரக் கோரினார். இன்சூரன்ஸ் நிறுவனம் அதனை இழுத்தடித்துக் கொண்டிருக்க அதற்குள் அந்தப் பெண்ணுக்கு மணுமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த மறுமணத்தை சுட்டிக் காட்டிய இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பீட்டுத் தொகையை தர வேண்டியதில்லை என்று கூறியது.
இந்நிலையில், அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடினார். மும்பை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. நீதிபதி எஸ்.ஜி.டிகே, இன்சூரன்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்தார். அதில் மனுதாரர் கணவர் கணேஷ் மறைவுக்குப் பின்னர் மறுமணம் செய்து கொண்டதால் நிறுவனம் அவருக்கு இழப்பீடு தரத் தேவையில்லை என்று கூறியிருந்தது.
இதனைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, “இன்சூரன்ஸ் நிறுவனம் தரும் இழப்பீட்டை வாங்குவதற்காக ஒரு விதவைப் பெண் வாழ்நாள் முழுவதும் தனியாக இருக்க வேண்டியதில்லை. விபத்து நடந்தபோது அந்தப் பெண்ணுக்கு வயது 19. அவருடைய அந்த வயது அவர் மறுமணம் செய்ததற்கான போதுமான நியாயத்தைச் சொல்கிறது. மேலும் மறுமணம் சமூகம் விலக்கி வைக்க வேண்டிய விஷயமில்லை. அதற்காக அவருடைய கணவர் விபத்தில் இறந்ததற்கான காப்பீட்டு பணத்தை தர மறுக்க முடியாது” என்று கூறினார்
இதற்கும் சமரசம் அடையாத இன்சூரன்ஸ் நிறுவனம், “விபத்தை ஏற்படுத்திய ஆட்டோ தானே மாவட்டத்திற்குள் மட்டுமே தான் பயணிக்க அனுமதியுள்ளது. ஆனால் அந்த ஆட்டோக்காரர் விதிகளை மீறி வேறு இடத்தில் ஓட்டி விபத்தில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளார். அதனால் நாங்கள் இழப்பீடு தரத் தேவையில்லை” என்றது.
இதனைக் கேட்ட நீதிபதி, “இது ஒரு பலவீனமாக நான் நினைக்கவில்லை. என்னைப் பொறுத்தவரை இன்சூரன்ஸ் நிறுவனம், இது தங்கள் இன்சூரன்ஸ் பாலிஸிக்கு எதிரானது என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டது. இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்கிறேன்” என்றார்.