தமிழ்நாடு சட்ட மன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று (ஏப்ரல் 1) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை தொடர்பான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற்றது.
இதில் பதில் அளித்த பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமாக அதிவேக இணைய இணைப்பு தொடர்பான அறிவிப்பு கவனம் பெற்றுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களுக்கு அதிவேக இணைய இணைப்பை வழங்குதல் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 20,000 அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு நம்பகமான, அதிவேக மற்றும் பாதுகாப்பான இணைய இணைப்பை வழங்க ரூ184 கோடி முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.
இம்முயற்சியானது அரசின் செயல்பாடுகள் மற்றும் சேவைகளின் செயல்திறனை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இது திறன்மிகு ஆளுகைக்கான வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் நம்பகமான அதிவேக இணைய சேவைகளை வழங்குதல் தொடர்பான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.
உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்களின் சேவைகளைப் பயன்படுத்தி மாநிலத்தில் உள்ள குடும்பங்களுக்கு குறைந்த விலையில் நம்பகமான அதிவேக இணைய சேவைகளை ரூ.100 கோடி செலவினத்தில் அரசு/பொது சந்தை நிறுவனங்களிடமிருந்து கடன் பெற்று வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இது டிஜிட்டல் இடைவெளியை குறைக்கவும், மாநிலத்தில் டிஜிட்டல் புரட்சியை ஏற்படுத்தவும், மக்களுக்கு அவர்களின் இருப்பிடத்திலேயே அரசின் சேவைகளை வழங்குவதில் ஒரு ஊக்கியாக செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.