கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள கானாங்குளத்தங்கரை பகுதியைச் சேர்ந்தவர் முருகன்(52). கேரளாவில் கட்டட வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பிரேமா (46). இவர்களுக்கு அருண் (20), அனீஸ் (18), அஜின் (15) ஆகிய 3 மகன்கள் உள்ளனர். அருண் 12-ம் வகுப்பும், அனீஸ் 11-ம் வகுப்பும், அஜின் 6-ம் வகுப்பும் படித்துள்ளனர். இவர்களுடன் பிரேமாவின் தாய் வசந்தா (74), அண்ணன் ஜோதி (50) ஆகியோரும் வசித்து வருகின்றனர். ஜோதிக்கு திருமணம் ஆகவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஆத்திவிளை ஊராட்சி கவுன்சிலர் பெல்சி என்பவர் நேற்று முந்தினம் காலை அப்பகுதியில் வீட்டுவரி வசூல் செய்துள்ளார். அப்போது பிரேமாவின் வீட்டு காம்பவுண்ட் கேட்டை தட்டி உள்ளார். ஆனால் வீட்டில் இருந்து எந்த சத்தமும் கேட்கவில்லை. காம்பவுண்ட் கேட்டும் உட்புறமாக பூட்டு போடப்பட்ட நிலையில் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த பெல்சி ஊராட்சி தலைவர் அகஸ்டினாளுக்கு தகவல் கொடுத்தார்.
இருவரும் அப்பகுதியில் விசாரித்த போது, கொரோனாவுக்கு பின்னர் கடந்த 3 ஆண்டுகளாக பிரேமா மற்றும் முருகன் இருவரும் சேர்ந்து 3 மகன்களையும் வீட்டிற்குள் காம்பவுண்ட் கேட்டை பூட்டி அடைத்து வைத்திருப்பதும், 3 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதாகவும் அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
உடனே அகஸ்டினாள் குழந்தைகள் நல உதவி மையம் 1098 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து இரணியல் காவல் நிலையத்திற்கும், சுகாதார துறைக்கும் தகவல் தெரிவித்தனர். இரணியல் சப் இன்ஸ்பெக்டர் ஜோதி தனிஸ்லாஸ் தலைமையிலான போலீஸார் மற்றும் திருவிதாங்கோடு சுகாதாரத்துறை ஆய்வாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 3 மகன்களின் பள்ளி மாற்றுச் சான்றிதழை கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பே பள்ளியில் இருந்து வாங்கி வந்திருப்பதும் தெரிய வந்தது. கேரளாவில் வேலை செய்யும் முருகன் எப்போதாவது வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். வீட்டில் இருந்து மூதாட்டி வசந்தா மட்டுமே வெளியே சென்று உணவு பொருள்களை வாங்கியுள்ளார். வீட்டில் சமையல் செய்து அனைவரும் சாப்பிட்டு உள்ளனர். இதுகுறித்து அவர்கள் யாரும் சரியாக பேசவில்லை. அதிகாரிகள் கேட்ட கேள்விக்கு அனீஷ் வாய்திறந்து பேசாமல் ஒரு பேப்பரில் பதில் எழுதி கொடுத்தார்.
அதில், “எனக்கு ஒரு பிரச்னையும் இல்லை. அடுத்த வீட்டு பேச்சை ஒட்டுகேட்டுகிட்டு என் அப்பா நம்பரை நான் கொடுத்துவிட்டேன் என்று என்னை துரோகின்னு சொல்லிட்டாங்க. என்ன எப்போதும் சந்தேகப்படுவாங்க. நான் என் அப்பா நம்பரை கொடுக்கவும் இல்லை. அதனால்தான் நான் யாரிடமும் பேசமாட்டேன். எந்த தப்பும் பண்ணாத என்னை என் அப்பா, அம்மா துரோகின்னு சொல்லிட்டாங்க. எனக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கவேண்டிய அவசியம் இல்லை. மை ஹெல்த் அண்ட் மெண்டலி குட்” என எழுதியிருந்தார்.
மேலும் அதிகாரிகள் கேட்டதன் அடிப்படையில் பெற்றோர் அனுமதியுடன் இரண்டு பிள்ளைகள் காப்பகத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பேப்பரில் எழுதி கொடுத்த அனீஷ் வாய்திறந்து பேசி மூன்று ஆண்டுகள் ஆகிறது என கூறப்படுகிறது. எனவே அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரிக்கு அதிகாரிகள் அனுப்பிவைத்தனர். மேலும் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. ஆசிரியர் அடித்ததால் மாணவர்கள் ஸ்கூலுக்கு செல்லவில்லையா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.