கே.வி.குப்பம்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் ஊராட்சி இ.பி. காலனி பகுதியில் நேற்று மாடுவிடும் விழா நடைபெற்றது. 235 காளகைள் பங்கேற்றன. காளைகள் வாடி வாசலில் இருந்து ஒன்றன்பின் ஒன்றாக கட்டவிழ்த்து விடப்பட்டன. ஓடு பாதையில் ஓடிய காளைகளை இளைஞர்கள் சிலர் துன்புறுத்தியதால் 2 காளைகள் திக்குமுக்காடி தடுப்புகள் மீது மோதியதில் லேசான காயம் ஏற்பட்டது. ஓடு பாதையின் அருகில் ஏரி உள்ளது.
ஏரியில் தண்ணீர் இருந்தும் முறையான தடுப்புகள் அமைக்காததால் சில காளைகள் தண்ணீரில் விழுந்தும், சில காளைகள் ஏரியில் உள்ள முட்புதரிலும் சிக்கி காயமடைந்தன. பசுமாத்தூர் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரின் காளை வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து ஓடியது. ஓடிய வேகத்தில் விரிஞ்சிபுரம் ரயில்வே கேட் அருகில், காட்பாடி- பெங்களூர் ரயில்வே பாதையில் பெங்களூரை நோக்கி சென்ற ரயிலில் மோதி துடிதுடித்து இறந்தது.