திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4ம் நாளான நேற்று நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாளை உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாளுக்கு எழுந்தருளி சேர்த்தி சேவை நடக்கிறது.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
ஏப்ரல் 5ம் தேதி தாயார் சேர்த்தி சேவையும், 6ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. பங்குனி தேர்த் திருவிழாவின் 4ம் நாளான நேற்று நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து பல்லக்கில் காலை 8 மணிக்கு புறப்பட்டு சித்திரை வீதிகள் வலம் வந்து ரங்க விலாச மண்டபத்திற்கு காலை 9.30 மணிக்கு வந்து சேர்ந்தார். அதைத்தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணிக்கு ரங்க விலாச மண்டபத்திலிருந்து நம்பெருமாள் தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகள் வலம் வந்து இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அதன்பின் இரவு 9 மணிக்கு வாகன மண்டபத்திலிருந்து நம்பெருமாள் புறப்பட்டு கண்ணாடி அறைக்கு இரவு 9.30 மணிக்கு சேர்ந்தார்.
விழாவின் 5ம் நாளான இன்று 1(ம் தேதி) அதிகாலை 4 மணி்க்கு கண்ணாடி அறையில் இருந்து புறப்பட்டு 4.30 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். வாகன மண்டபத்தில் இருந்து காலை 5.15 மணிக்கு நம்பெருமாள் சேஷ வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகள் வலம் வந்து வாகன மண்டபத்திற்கு காலை 6.30 மணிக்கு வந்து சேருகிறார். வாகன மண்டபத்தில் இருந்து காலை 8 மணிக்கு தோளுக்கினியானில் புறப்பட்டு சேஷராயர் மண்பத்திற்கு 8.30 மணிக்கு வந்து சேருகிறார். பின்னர் அங்கிருந்து, மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகள் வலம் வந்து இரவு 8 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார். பின்னர் இரவு 8.30 மணிக்கு வாகன மண்டபத்தில் இருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு கண்ணாடி அறை சேர்கிறார்.
6ம் நாளான நாளை (2ம் தேதி) நம்பெருமாள் அதிகாலை 3.30 மணிக்கு கண்ணாடி அறையில் இருந்து தங்கபல்லக்கில் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி உறையூர் கமலவல்லி நாச்சியார் கோயிலில் ஆஸ்தான மண்டபத்தில் காலை 11 மணிக்கு எழுந்தருளுகிறார். பகல் 12 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நாச்சியார் கோவில் முன்மண்டபம் வந்தடைகிறார்.
தொடர்ந்து 1.15 மணிக்கு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சேர்த்தி மண்டபம் செல்கிறார். அங்கு பகல் 2 மணிமுதல் இரவு 12 மணி வரை சேர்த்தி சேவை நடக்கிறது. அதனை தொடர்ந்து அதிகாலை (3ம் தேதி) 1.30 மணிக்கு சேர்த்தி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வெளி ஆண்டாள் சந்நிதியில் மாலை மாற்றி அதிகாலை 4.30 மணிக்கு ரங்கம் கோயில் கண்ணாடி வந்தடைகிறார்.
7ம் நாள் (3ம் தேதி) நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சந்தனு மண்டபத்தில் இருந்து திருச்சிவிகையில் மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு திருக்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 8ம் நாள் (4ம் தேதி) நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளுகிறார். 9ம் நாள் (5ம் தேதி) தாயார் சேர்த்தி சேவை, அதனை தொடர்ந்து காலை 8 மணிக்கு பங்குனி தேரோட்டம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்துள்ளனர்.