சென்னை : நடிகர் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகி வருகிறது இந்தியன் 2 படம்.
இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை உள்ளிட்ட பல இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங் மற்றும் சூட்டிங் எப்போது நிறைவடையும் என்பது குறித்து இயக்குநர் ஷங்கர் அப்டேட் தெரிவித்துள்ளார்.
இந்தியன் 2 படம்
நடிகர்கள் கமல்ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த 2018ம் ஆண்டில் துவங்கப்பட்ட நிலையில் சில பிரச்சினைகள் காரணமாக படத்தின் சூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கமலின் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படம் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இதற்கிடையில் ராம்சரணின் கேம் சேஞ்சர் படத்தில் ஷங்கர் கமிட்டாகியதால், இந்தியன் 2 படத்தின் சூட்டிங் தாமதமாகி வருகிறது.
சூட்டிங்கை விரைவில் முடிக்க கமல் ஆர்வம்
இந்தப் படம் ஜுன் மாதத்தில் அல்லது தீபாவளி ரிலீசாக வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அதற்குள் சூட்டிங்கை ஷங்கர் நிறைவு செய்து சிஜி வேலைகளையும் முடித்து படத்தை வெளியிடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் படம் பொங்கல் ரிலீசாக வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த கமிட்மெண்ட்களில் கமல் பிசியாகியுள்ள நிலையில் படத்தை விரைவில் முடிக்க அவர் ஆர்வம் காட்டி வருகிறார்.
சூட்டிங் குறித்து ஷங்கர் அப்டேட்
படத்தின் சூட்டிங் திருப்பதி, சென்னை, ஐதராபாத் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ள நிலையில் படத்தின் 80 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய படத்தின் இயக்குநர் ஷங்கர், படத்தின் சூட்டிங் வரும் ஜுன் மாதத்தில் நிறைவடையும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து சந்தேகத்துடனேயே ரசிகர்களை வைத்திருக்காமல் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
வெளிநாடு செல்லும் படக்குழு
இதனிடையே படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்கிற்காக படக்குழுவினர் தென்னாப்பிரிக்கா மற்றும் தாய்வான் நாடுகளுக்கு செல்லவுள்ளதாகவும் படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டிலேயே சூட்டிங் துவங்கப்பட்டு, படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து உள்ளிட்ட காரணங்களால் சூட்டிங் நிறுத்தப்பட்டு தற்போது நான்கு ஆண்டுகள் கழித்து படம் மீண்டும தூசித்தட்டப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது.
பிரம்மாண்ட கூட்டணி
படத்தில் அடுத்தடுத்த போஸ்டர்கள், சூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் ஆகியவை வெளியிடப்பட்டு வரும் சூழலில், பிரம்மாண்டத்தின் உச்சமாக கருதப்படும் ஷங்கர், இந்தப் படத்திலும் அதையே கையாண்டு வருகிறார். அதனால் படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு முதல் பாகத்தை காட்டிலும் சிறப்பான அனுபவத்தையே கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் லைகா, ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் என மூன்று தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துவருவதும் படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.
ராம்சரணின் கேம் சேஞ்சர்
ராம்சரணின் 15வது படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கு கேம் சேஞ்சர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படமும் மிகவும் பிரம்மாண்டமாக ராம் சரண் கேரியரில் மிகவும் சிறப்பான படமாக உருவாகிவரும் சூழலில், இந்தப் படத்தின் சூட்டிங், இந்தியன் 2 படத்தின் சூட்டிங்கிற்கு முன்னதாகவே நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாக இருந்தாலும் படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்க ஷங்கர் படம் என்ற ஒரு காரணம் ரசிகர்களுக்கு போதும் என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறது.