IPL 2023 Preview – DC: கோச் பாண்டிங், கேப்டன் வார்னர்; டெல்லியை அரியணையேற்றுமா இந்த ஆஸ்திரேலிய இணை?

15 சீசன்களையும் 12 கேப்டன்களுடன் பார்த்திருந்தாலும் கோப்பை என்னவோ இதுவரை டெல்லியின் ரேடாரில் சிக்கவேயில்லை.

2010-க்குப் பின் பல்லாண்டுகளாக ஒளியை விழுங்கும் குகைக்குள் அடையாளமின்றி பயணித்து வந்தது டெல்லி. துருவ நட்சத்திரமான பாண்டிங்கின் வரவுக்குப் பின்தான் வெளிச்சமே தென்பட்டு பிளே ஆஃப் வரவேற்பையே பெறவும் தொடங்கியது. 2020-ல் ஸ்ரேயாஸால் இறுதிப் போட்டியை எட்டிய அணியை பண்ட் சாம்பியனாக்குவார் என எதிர்பார்ப்பு நிலவ, சற்றே சரிவைச் சந்தித்த அணி கடந்த சீசனில் 50 சதவிகிதம் வெற்றியோடு ஐந்தாவது இடத்தில் முடித்தது.

இம்முறையோ பன்முக வீரரான பண்ட்டின் வல்லமையோடு ஆளுமையையும் ஒருங்கே இழந்து டெல்லி தடுமாறுகிறது. வார்னர் என்னும் ராஜாளியின் வசம் சேர்ந்துள்ள அணிக்கு இம்முறை வானம் வசப்படுமா அல்லது ஓடுதளத்திலேயே உடைந்த சிறகுகளோடு விபத்தினையே சந்திக்குமா?

David Warner

பலங்கள்:

சன்ரைசர்ஸால் சுட்டெரிக்கப்பட்ட பின் கடந்தாண்டு ஃபீனிக்ஸாக மீண்டு வந்தார் வார்னர். டெல்லிக்காக ஆடிய கடந்த சீசனில் 150.5 ஸ்ட்ரைக்ரேட்டோடு 432 ரன்களையும் குவித்தார். பேட்ஸ்மேனாக சோடை போகவில்லை எனக் காட்டிய அவருக்கு கேப்டனாகவும் தன்னை நிருபிக்க இன்னொரு தளம் கிடைத்துள்ளது. மீதமுள்ள பகைதீர்க்க தனது அனுபவத்தினைப் பயன்படுத்தி தனது 100 சதவிகிதத்தையும் இங்கே வார்னர் வெளிப்படுத்துவார்.

பலம் பொருந்திய பேட்டிங் லைன்அப் டெல்லியை வலுவானதாக்குகிறது. ப்ரித்வி ஷா உள்ளூர் கிரிக்கெட்டைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த சயத் முஸ்டாக் அலி தொடரில் மட்டும் அவரது ஸ்ட்ரைக்ரேட் 181.42. ஒன்டவுனில் இறங்கும் மார்ஷ் ஒருநாள் தொடரில் இந்தியாவுக்கு எதிராகக் காட்டிய வித்தையில் இருந்தே இன்னமும் பலரால் மீளமுடியவில்லை. இவர்கள் மட்டுமின்றி அடுத்தடுத்த இடத்தில் இறங்க வாய்ப்புள்ள மணீஷ் பாண்டே, பவல்/ரோசோ, சர்ஃப்ராஸ் கான் என எல்லோருமே தங்களது ப்ரைம் டைமில் இருக்கின்றனர். இவர்கள் போதாதென தரமுயர்த்தப்பட்ட பேட்டிங்கை சர்வதேச அளவிலேயே காட்சிப்படுத்தி விட்ட அக்ஸரோ முன்வரிசை வீரர்களோடு தோள்கொடுப்பதோடு கேம் சேஞ்சர் கதாபாத்திரத்தையும் சமயத்தில் தாங்குபவர்.

ஒருசில வீரர்களை மட்டுமே சார்ந்து இல்லாமல் பெரிய இன்னிங்க்ஸ்களையும் தாக்கத்தையும் பெரும்பாலானவர்களிடம் எதிர்பார்க்கலாம். பேட்டிங் 7-வது வீரர் வரைதான் நீளும் என்றாலும் அவர்களே போதுமான சேதாரத்தைச் செய்பவர்கள்.

Kuldeep

அக்ஸரை உள்ளடக்கிய சுழல்பந்து மேடையில் குல்தீப்பும் சேர்கையில் இன்னமும் மதிப்பூட்டப்படுகிறது. களத்திலிருந்து சற்றே ஆதரவு கிடைத்தாலும் சத்தமே இல்லாமல் எதிரணியின் பேட்டிங் லைன் அப் இவர்களால் தகர்க்கப்படும். கடந்தாண்டு 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்திய குல்தீப் இந்த சீசனிலும் டெல்லியின் முக்கிய துருப்புச் சீட்டாக உருவெடுக்கலாம். அண்டர் 19 உலகக்கோப்பையில் இடம்பிடித்திருந்த விக்கி ஓஸ்த்வாலையும் சில போட்டிகளில் பரிட்சித்துப் பார்க்கலாம்.

பலவீனங்கள்:

மற்ற அணிகளின் பலவீனங்கள் பெரும்பாலும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவையாக இருக்காது. ஆனால் டெல்லியின் பலவீனங்கள் சங்கிலித் தொடராக இணைக்கப்பட்டுள்ளன. அலையாகப் பரவும் அந்த அதிர்வுகளின் தொடக்கப் புள்ளியாக பண்ட்தான் இருக்கிறார்.

Pant

பண்ட் இல்லாத வெற்றிடத்தைதான் அணியைக் கட்டமைப்பதற்கான பல குழப்ப மேகங்களும் சுற்றி வருகின்றன. முதலாவதாக கேப்டன்ஷிப் பிரச்னையை வார்னர் ஈடுகட்டி விடுவார்தான் என்றாலும் கேப்டன் என்ற பதவி அவர் மோசமாகவே ஆடினாலும் விலக்கிவைக்க முடியாதென்ற சூழலை உண்டாக்கி ஒரு சின்ன அச்சுறுத்தலை அணிக்கு தந்துகொண்டே இருக்கும். அந்த நிலை வந்தால் ஒரு ஓவர்சீஸ் ஸ்லாட்டும் வீண் என்றுதான் கொள்ள வேண்டும். 2022 நவம்பருக்குப் பின் எந்த சர்வதேச டி20-யிலும் வார்னர் ஆடவில்லை. அதே காலகட்டத்திற்குப் பின் ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே களமிறங்கியுள்ளார். வீழ்ச்சியை சந்தித்துவரும் அவரது பேட்டிங் ஃபார்ம் அணிக்குத் தடுமாற்றமான தொடக்கத்தைத் தரலாம்.

பண்ட் இல்லாதது உருவாக்கி உள்ள இன்னொரு பிரச்னை யார் விக்கெட் கீப்பர் என்பது. பில் ஷால்டினை விக்கெட் கீப்பிங்கிற்காக மட்டுமே சேர்ப்பது ஒரு பிரதான பேட்ஸ்மேன் குறைவு என்ற அச்சத்தோடே ஆடவைக்கும். எனவேதான் சர்ஃப்ராஸ் கான் விக்கெட் கீப்பிங் பயிற்சி மேற்கொள்கிறார், அவருக்கு பேக்கப்பாக அபிஷேக் போரெல்லும் இருப்பார் என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

விக்கெட்டுகளை வீழ்த்தும் விஷயத்தில் சுழல்பந்து வீச்சாளருக்கும் விக்கெட் கீப்பருக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் எப்போதுமே இருக்கும். அந்த அலைவரிசையில் அனுபவமற்ற சர்ஃப்ராஸால் தன்னைப் பொருத்திக் கொள்ள முடியுமா? இயலாவிட்டால் தவறவிடப்பட்ட சில ஸ்டம்பிங்களும் கீப்பர் கேட்ச்களும் கூட போட்டியின் முடிவையே மாற்றும் அபாயம் உள்ளது.

இவையெல்லாம் சேர்ந்து ஓவர்சீஸ் வீரர்களால் நிரப்பப்பட வேண்டிய நான்கு இடங்களுக்கு பலமுனை போட்டிகளை உண்டாக்குகின்றன. கேப்டனாக வார்னர் நேரடியாக நுழைய மார்ஷும் தவிர்க்க முடியாத தேர்வுதான். மீதமுள்ள இரண்டில் ஒன்றுக்கு நார்க்கியா போட்டியின்றித் தேர்வாக இறுதி இடம் பவல் மற்றும் ரோசோ ஆகிய இருவரில் ஒருவருக்குத்தான் வழங்கப்பட முடியும்.

இருவருமே மேட்ச் வின்னர்ஸ் எனத் தெரிந்தும் ஒருவருக்கு `நோ எண்ட்ரி’ பதாகை வைக்க வேண்டிய நிலை டெல்லிக்கு. இது பொக்கிஷத்தை தூசிபடிய விடுவதற்கு ஒப்பானதே என்றாலும் வேறு வழி இல்லை.

Ishant

ஓவர்சீஸ் வீரர்களின் ஸ்லாட்டுக்கான பிரச்னையின் வேர் எல்லாப் பக்கங்களிலும் விவாத ரேகைகளை படர விட்டுள்ளது. இந்திய வேகப்பந்துவீச்சு அச்சுறுத்துவதாக இல்லை. இஷாந்த் அவரது பழைய பிம்பத்தோடு இல்லை. சஹாரியாவின் செயல்பாடுகள் கூட அறிமுக சீசனுக்குப் பின் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத் தொடங்கி விட்டன. கலீலால் கடந்த ஆண்டு மேஜிக்கை மீட்டுருவாக்கம் செய்ய முடியுமா? நாகர்கோட்டியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியுமா? உள்ளூர் கிரிக்கெட்டில் மிளிர்ந்தார் என்பதற்காக 5.50 கோடி கொடுத்து வாங்கப்பட்ட முகேஷ் குமாரை அனுபவமில்லை எனச் சொல்லி பெஞ்சில் அமர்த்தி வேடிக்கைதான் பார்க்கப் போகிறார்களா?

இந்த அடுத்தடுத்த கேள்விகள் ஐயமேயின்றி விளக்குவது இந்திய ஃபாஸ்ட் பௌலிங் சற்றே பின்தங்குவதைத்தான். நார்க்கியா தவிர இன்னொரு அயல்நாட்டு பௌலர் அந்தப் பின்னடைவை சரிசெய்ய தேவைப்படுகிறார். முஸ்தஃபிஸுரும் எங்கிடியும் கூட தயாராகவே இருக்கின்றனர். ஆனால் அணியில் அவர்களுக்கான இடமில்லை என்பதுதான் டெல்லியின் மிகப்பெரிய துயர்.

ஆஃப் ஸ்பின்னர் என்ற அங்கீகாரத்தால் அணியில் கிடைத்த வாய்ப்புக்கு லலித் யாதவ் கடந்த சீசனில் நியாயம் கற்பிக்கவில்லை.

எனவே இம்முறை அக்ஸரை உள்ளடக்கி ஏழு பேட்ஸ்மேன்களோடும் ஐந்து பௌலர்களோடும் இறங்கும் இக்கட்டான நிலையிலேயே டெல்லி உள்ளது. ஆக ஏழாவது எட்டாவது பௌலிங் ஆப்சனோடெல்லாம் மற்ற அணிகள் களம் காண ஆறாவது பௌலர் என்னும் ஆப்சனே இல்லாமல் டெல்லி இறங்குவது சமயத்தில் காலை வாரலாம். ஏதோ இரு பௌலருக்கு அன்றைய நாள் சரியாக அமையா விட்டாலும் கத்திக்கு கழுத்தைத் தருவதைப் போல ஓவர்களை அவர்கள்தான் முடித்தாக வேண்டும். இது பெரும் பாதகமாக அமையும்.

Ponting

எல்லோருமே அடிக்க வேண்டும் என எண்ணமுள்ளவர்களாக இருப்பதனால் நின்று ஆங்கரிங் ரோலில் ஆடி மற்றவர்களை தன்னைச் சுற்றி இயங்க வைக்க ஒருவர் இல்லாதது சமயங்களில் நெருக்கடியை உண்டாக்கும். இவை எல்லாவற்றுக்கும் மேலாக மற்ற அணிகளைப் போல் அல்லாமல் டெல்லிக்கு பேக் டு பேக் எந்த ஹோம் மேட்சுமே இல்லை என்பதால் தொடர் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதுவும் வீரர்களை சோர்வடையச் செய்யலாம்.

நைல் நதியாக நீளும் பலவீனங்களின் பட்டியலின் முன்னால் பலங்களாலே தாக்குப் பிடிக்காமல் அடித்துச் செல்லப்படுவது போன்ற தோற்றத்தையே அணியின் அமைப்பு உண்டாக்குகிறது.

இவற்றை எல்லாம் தாண்டி ப்ளே ஆஃப் வரை வேண்டுமெனில் டெல்லி கேப்பிடல்ஸால் முன்னேற முடியும். நாக் அவுட் போட்டிகளையோ கோப்பையையோ வெல்ல வார்னரின் கேப்டன்ஸியும் பேட்ஸ்மேன்களும் ஸ்பின்னர்களும் மட்டும் போதாது. ஒவ்வொரு வீரரின் பங்களிப்புமே முதல் தேவை. என்ன செய்யப்போகிறது டெல்லி? பொறுத்திருந்து பார்ப்போம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.