சென்னை: சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டுடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பத்து தல படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்த நிலையில், இரண்டாவது நாளில் வசூல் குறைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இரண்டே நாளில் பத்து தல திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார் சிம்பு.
சிம்புவின் பத்து தல
சிம்பு நடிப்பில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி வெளியானது. சிம்புவுடன் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கிருஷ்ணா இயக்கத்தில் வெளியான இந்தப் படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓபனிங் இருந்தது. சிம்பு ஃபர்ஸ்ட் ஆஃப் முடியும் போது என்ட்ரி கொடுத்தாலும் இடைவேளைக்குப் பிறகு கொஞ்சம் மாஸ் காட்டினார்.
இரண்டே நாளில் வெற்றி விழா
ஆனாலும் இந்தப் படத்தில் சிம்புவை விடவும் கெளதம் கார்த்திக் கேரக்டருக்கு தான் அதிக முக்கியத்துவம் இருந்தது. இந்நிலையில், பத்து தல படத்தின் வெற்றியை இரண்டே நாட்களில் கொண்டாடியுள்ளார் சிம்பு. இயக்குநர் கிருஷ்ணா, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆகியோருடன் சிம்பு உள்ளிட்ட பத்து தல படக்குழுவினர் மாலை அணிந்து பத்து தல வெற்றியை கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
காரணம் இதுதான்
பத்து தல படத்திற்கு முதல் நாளில் தரமான ஓபனிங் இருந்தும் நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்தது. இதனால், மார்ச் 31ம் தேதி வெளியான விடுதலை படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் விடுதலைக்கு மிகப் பெரிய வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால் தியேட்டர்களில் பத்து தல படத்தை தூக்கிவிட்டு விடுதலை ஸ்க்ரீன் செய்யப்பட்டு வருகிறது. மேலும், அடுத்த வாரம் இன்னும் நிலைமை மோசமாகும் என்பதால் இப்போதே பத்து தல படத்தின் வெற்றியை கொண்டாடிவிட்டதாக சொல்லப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸில் தடுமாற்றம்
அதேநேரம் பத்து தல படத்தின் பாக்ஸ் ஆபிஸிலும் அதிக மாற்றம் காணப்பட்டுள்ளது. முதல் நாளில் 12 கோடி வரை வசூலித்த பத்து தல, அடுத்த நாளில் 8 கோடி ரூபாய் மட்டுமே கலெக்ஷன் செய்துள்ளது. இரண்டு நாட்களில் மொத்தமே 20 கோடி மட்டுமே வசூலான நிலையில், முதல் வாரம் 40 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு, வெந்து தணிந்தது காடு படங்கள் மூலம் கம்பேக் கொடுத்த சிம்பு, பத்து தல படத்தில் தடுமாறிவிட்டார் என்றே சினிமா விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.