சென்னை: இயக்குநர் ஒபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் நடித்த பத்து தல படத்திற்கு கலவையான விமர்சனங்கள் குவிந்தன.
முதல் நாளில் பாக்ஸ் ஆபிஸில் எந்தவொரு போட்டியும் இல்லாமல் சிம்பு படம் வெளியானது. ஆனால், நேற்று வெற்றிமாறனின் விடுதலை திரைப்படம் வெளியான நிலையில், பத்து தல வசூலில் சற்றே சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பத்து தல படத்தின் முதல் மற்றும் இரண்டாம் நாள் வசூல் குறித்த தகவல்களை இங்கே காண்போம் வாருங்கள்..
பாதியில் வரும் சிம்பு
பத்து தல படத்தில் நடிகர் சிம்புவின் கதாபாத்திரத்திற்கு முதல் பாதி முழுவதும் பில்டப் கொடுக்கப்பட்ட நிலையில், இடைவேளைக்கு முன்னதாக அசுரத்தனமான என்ட்ரி கொடுத்துள்ளார் சிம்பு. ஆனால், படத்தை பார்க்க சென்ற சிம்பு ரசிகர்களுக்கு இரண்டாம் பாதி ஈர்த்த அளவுக்கு முதல் பாதி கவுதம் கார்த்திக்கின் நடிப்பு நல்லா இருந்தும் சிம்புவை பார்க்க முடியவில்லையே என்கிற அதிருப்தி அதிகளவில் எழுந்துள்ளது.
ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
பத்து தல படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் விமர்சனங்கள் குவிந்தது படத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலும், ப்ளூ சட்டை மாறன் பத்து தல படத்தை பங்கமாக கழுவி ஊற்றி நடிகர் சிம்புவையும் விமர்சித்து இருப்பது ரசிகர்களை அப்செட் ஆக்கி உள்ளது. ப்ளூ சட்டை பாராட்டினாலே அந்த படம் ஹிட் தான் என ஒரு க்ரூப் சுத்தி வரும் நிலையில், அவரது விமர்சனத்தால் பத்து தல படத்தின் வசூலில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.
12 கோடி வசூல்
பத்து தல படத்துக்கு பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா எல்லாம் நடத்தி பயங்கரமாக ப்ரோமோஷன் செய்த நிலையில், முதல் நாளில் பத்து தல படம் 12 கோடி ரூபாய் வசூலை ஈட்டி உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இரண்டாம் நாளும் படத்துக்கு நல்ல வசூல் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இரண்டாம் நாள் வசூல்
இந்நிலையில், பத்து தல படத்தின் இரண்டாம் நாள் வசூல் 8 கோடி ரூபாய் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் பத்து தல படம் இரண்டாம் நாளில் 3 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக கூறுகின்றனர். சிம்புவின் மிரட்டலான நடிப்பை காண அவரது ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வரும் நிலையில், முதல் வார வசூல் சுமார் 40 கோடியை நெருங்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
ரோகிணி தியேட்டர் சர்ச்சை
பத்து தல படத்தை பற்றிய பேச்சுக்களை விட சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் பத்து தல படத்தை பார்க்க சென்ற நரிக்குறவ இன மக்களை தடுத்த சம்பவம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் காரணமாக ரோகிணி தியேட்டரின் இரண்டாம் நாள் டிக்கெட் புக்கிங் பாதியளவு குறைந்து விட்டதாகவும் ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட்டுகளை பதிவிட்டு வந்தனர்.
சரிவுக்கான காரணம்
சிம்புவின் பத்து தல திரைப்படம் முதல் நாளில் 12 கோடி வசூல் ஈட்டிய நிலையில், இரண்டாம் நாளில் 8 கோடி வசூலை ஈட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், விடுதலை படத்தின் ரிலீஸ் மற்றும் கலவையான விமர்சனங்கள் தான் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பத்து தல படத்தை பார்க்கத்தான் ரசிகர்கள் குடும்பத்துடன் செல்வார்கள் என்பதால் பத்து தல படம் அதிகமாக வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.