ஐதராபாத் : நடிகை சமந்தா சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கொண்டவராக காணப்படுகிறார். திருமணம், விவாகரத்து என அடுத்தடுத்த நிகழ்வுகள் தன்னுடைய கேரியரை பாதிக்காத வண்ணம் பார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாக மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பில் இருந்த சமந்தா, தற்போது அதிலிருந்து மீண்டு சூட்டிங்கில் பங்கேற்று வருகிறார்.
சமந்தா நடிப்பில் வெளியான யசோதா சிறப்பான வசூலை பெற்ற நிலையில் வரும் 14ம் தேதி தமிழ் புத்தாண்டையொட்டி அவரது சாகுந்தலம் படம் வெளியாகவுள்ளது.
நடிகை சமந்தா
நடிகை சமந்தா தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பாலிவுட்டிலும் வெப் தொடர்கள், படங்கள் என கமிட்டாகி நடித்து வருகிறார். தமிழில் பானா காத்தாடி என்ற படத்தில் அறிமுகமான சமந்தா, தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர்களை எப்போதும் தன்பக்கம் வைத்துள்ளார் சமந்தா.
விவாகரத்து அறிவிப்பு
நாக சைத்தன்யாவுடன் காதல் மற்றும் திருமணம் என சிறப்பாகவே சென்றது சமந்தாவின் வாழ்க்கை. ஆனால் 4 ஆண்டுகள் தொடர்ந்த இவர்களின் காதல் திருமணம் ஒரு கட்டத்தில் நிலைக்காமல் போனது. நாக சைத்தன்யா மற்றும் சமந்தா இருவரும் ஒரே நேரத்தில் தங்களது பிரிவு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கும் முயற்சியில் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் தோற்றுத்தான் போனார்கள்.
சமந்தா மீது விமர்சனங்கள்
தொடர்ந்து சமந்தா மீது அதிகமான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இந்த பிரிவிற்கு அவர்தான் காரணம், அவர் குழந்தை பெற்றுக் கொள்ள மாட்டேன் என மறுப்பு தெரிவித்தார் என பல விமர்சனங்கள் வைக்கப்பட்டன. துவக்கத்தில் இந்த விமர்சனங்களை எதிர்த்து குரல் கொடுத்த சமந்தா, ஒரு கட்டத்தில் அமைதியை கடைப்பிடித்தார். தன்னுடைய மன இறுக்கங்களில் இருந்து தப்பிக்க ஆன்மீக பாதையில் நடைபோட்டார். அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் ஏற்று நடிப்பில் கவனம் செலுத்திவந்தார்.
மனஉளைச்சலில் சமந்தா
இந்த மன உளைச்சலில் இருந்து அவர் விடுபடும் முன்னதாகவே மயோசிட்டிஸ் என்ற அரியவகை நோய் பாதிப்பிற்கு உள்ளானார். இதையடுத்து அவர்மீது பரிதாபம் கொண்ட ரசிகர்கள் பிரார்த்தனையை மேற்கொண்டனர். ஆனால் ஒருசிலரோ நாக சைத்தன்யாவிற்கு செய்த துரோகம்தான் சமந்தாவிற்கு நோய் பாதிப்பை கொடுத்ததாக விமர்சித்தனர். இந்த விமர்சனங்களை எல்லாம் அமைதியாகவே எதிர்கொண்டார் சமந்தா.
மீண்டு(ம்) வந்த சமந்தா
நெருப்பை விட மோசமான இந்த விமர்சனங்களில் இருந்து பீனிக்ஸ் பறவையாக தன்னை மீண்டும் மீண்டும் வெளியில் கொண்டுவந்தார் சமந்தா. அவரது இந்த வைராக்கியம், அர்ப்பணிப்பு மற்றவர்களுக்கு பாடமாக அமைந்துள்ளது. இந்த நோய் பாதிப்பிலும் சமந்தா நடிப்பில் முன்னதாக ரிலீசுக்கு காத்திருந்த யசோதா படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக அவரது நடிப்பில் சாகுந்தலம் என்ற படம் வரும் ஏப்ரல் 14ம் தேதி வெளியாகவுள்ளது.
விவாகரத்து குறித்து எமோஷனல்
இதற்கான பிரமோஷன்களில் பங்கேற்ற சமந்தா, சேனல் ஒன்றிற்கு கொடுத்த பேட்டியில் தன்னுடைய விவாகரத்து குறித்து பேசியுள்ளார். தான் தன்னுடைய திருமண பந்தத்தில் 100 சதவிகிதம் நேர்மையாக இருந்ததாகவும் ஆனால் அது தனக்கு சரியாக அமையாத நிலையில், தான் தவறு செய்ததை போல ஓடி ஒளிய விரும்பவில்லை என்றும் தன்னைத்தானே வருத்திக் கொள்ள விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே பல வேதனைகளை அனுபவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.