மதுரை: சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்திற்குப் பிறகு வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசலில் நடிக்கவுள்ளார் சூர்யா.
இந்நிலையில், தனது குடும்பத்தினருடன் மதுரை அருகேயுள்ள கீழடி அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார்.
அதன் பின்னர் கீழடி அருங்காட்சியகம் குறித்து சூர்யா ட்வீட் செய்துள்ள நிலையில், இன்னொரு பக்கம் அவரை விமர்சித்து ப்ளு சட்டை மாறன் ட்வீட் செய்துள்ளார்.
கீழடியில் சூர்யா
சூர்யாவின் 42வது படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். தற்காலிகமாக சூர்யா 42 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்ற வருகிறது. இந்நிலையில், நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் கீழடி அருங்காட்சியகத்தை சுற்றிப் பார்த்தார். சூர்யா, அவரது மனைவி ஜோதிகா, மகன் தேவ், மகள் தியா ஆகியோருடன், மதுரை எம்பி சு வெங்கடேசனும் கீழடியை பார்வையிட்டார்.
சூர்யா பெருமிதம்
கீழடியில் தொல்லியல் துறை சார்பில் நடத்தப்பட்ட அகழாய்வுக்குப் பின்னர், அதில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. உலக தரத்தில் உருவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில் தற்போது பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கீழடியை சுற்றிப் பார்த்த பின்னர் அதுகுறித்து சூர்யா பெருமிதமாக ட்வீட் செய்துள்ளார்.
தமிழ் நாகரித்தின் தனிச்சிறப்பு
அதில், “பெருமிதம்!!! வைகை நாகரீகம் தொன்மையும் தொடர்ச்சியும் தமிழ் நாகரிகத்தின் தனிச்சிறப்பு என்பதை ‘கீழடி’ உணர்த்துகிறது. 2600 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் வாழ்வியலை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்போம். தமிழரின் வைகை நாகரிகத்திற்கு இதுஒரு தொடக்கமே. அகழ்வாராய்ச்சியின் மூலம் புதிய வரலாறு எழுதப்படும். அழகியல் உணர்வோடு அருங்காட்சியகம் அமைத்து, கீழடி, தமிழரின் தாய்மடி என்பதை உலகறிய செய்த தமிழ்நாடு அரசுக்கு நன்றிகள். குழந்தைகளுடன் அனைவரும் வருக!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ப்ளு சட்டை மாறன் ட்வீட்
இந்த டிவிட்டர் பதிவு பலரது கவனத்தையும் ஈர்த்து வரும் நிலையில், ப்ளு சட்டை மாறன் சூர்யாவை விமர்சிக்கும் விதமாக ட்வீட் செய்துள்ளார். அதில், கீழடி அருங்காட்சியகத்தை சூர்யா குடும்பத்தோடு பார்வையிட்டபோது பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் அவர்கள் வெயிலில் காத்திருந்துள்ளனர். இதுகுறித்து செய்தியை தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார் ப்ளு சட்டை மாறன். ஆனால், அவர் தனது சொந்த கருத்து எதையும் குறிப்பிடவில்லை.
பொதுமக்கள் காத்திருப்பு
ஏப்ரல் 1ம் தேதி முதல் அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்க கட்டணம் வசூலிப்பது அமலுக்கு வந்துள்ளது. காலை 10 முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பார்வையாளர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 10 மணிக்கு பொதுமக்கள் அருங்காட்சியகத்தை சுற்றிப்பார்க்க வந்திருந்தும் 10.20 வரை கதவுகள் திறக்கப்படவில்லை. இதனால், பொதுமக்களும் பள்ளி குழந்தைகளும் அருங்காட்சியகத்துக்கு வெளியே வெயிலில் காத்திருந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அப்போது சூர்யா உள்ளே இருப்பதால் நீங்கள் காத்திருக்க வேண்டும் என போலீஸார் கூறியதால், ஆத்திரமடைந்த அவர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.