சென்னை : வெற்றி மாறன் இயக்கி உள்ள விடுதலை திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியானது. இப்படத்திற்கு மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் வந்துக்கொண்டு இருக்கின்றன.
படத்தில் விஜய்சேதுபதி, சூரி,கௌதம் மேனன், ராஜிவ் மேனன், சேத்தன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர்.
விடுதலை திரைப்படம் அடுத்த ஜெய்பீம் என படத்தை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், விடுதலை படத்தை இந்த ஐந்து காரணத்திற்காக நீங்கள் கட்டாயம் பார்க்கலாம்.
வெற்றிமாறன்
வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து அதில் வெற்றி பெற்றவர் இயக்குநர் வெற்றிமாறன். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து விடுதலை படத்தை இயக்கி உள்ளார். முதலில் சிறிய பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் பல கோடி செலவில் இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. ஆடுகளம், விசாரணை, அசுரன் போன்ற படங்களில் தேசிய விருதை பெற்ற வெற்றி மாறனுக்கு இந்த படத்திலும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என படம் பார்த்தவர்கள் கருத்துக்கூறி வருகின்றனர்.
இளையராஜா இசை
விடுதலைப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது இசைஞானி இளையராஜாவின் இசை. விடுதலை முதல் பாகத்தில் முதன்முறையாக இளையராஜா இசையில் தனுஷ் பாடிய ஒன்னோட நடந்தா, அநன்யா பட் பாடிய வழிநெடுக காட்டுமல்லி, அருட்பெரும் ஜோதி பாடல் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. பின்னணி இசை காட்சியில் இரண்டற கலந்து மனதை பிழிந்துவிட்டது. எத்தனை இசையமைப்பாளர்கள் வந்தாலும் இளையராஜா இளையராஜா தான் என மீண்டும் நிரூபித்துள்ளார்.
விஜய்சேதுபதி
இப்படத்தில் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியார் என்கிற புரட்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒரு மலை கிராமத்தில் சுரங்கம் அமைத்து பாதை உருவாக்க அரசாங்கம் முடிவு எடுக்கிறது. இந்த சுரங்கத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடும் மக்கள் படை என்ற இயக்கத்தை சேர்ந்தவராக விஜய்சேதுபதி நடித்து, அனல் பறக்கும் வசனங்களால் கைத்தட்டலை பெற்றுள்ளார்.
சூரி
இத்தனை நாட்களாக நகைச்சுவை நடிகராக இருந்த சூரி, நடை, உடை, பாவனை என அனைத்தையும் கடுமையான உழைப்பின் மூலம் மாற்றி உள்ளார். மக்களுக்காக போராடும் மக்கள் படையை பிடிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவில் சூரி கான்ஸ்டபிள் குமரேசனாக நடித்துள்ளார். அதிரடியாக வரும் பல காட்சிகளில் சூரி டூப்பே இல்லாமல் நடித்துள்ளார்.
‘ஏ’ சான்றிதழ்
2 மணிநேரம் 30 நிமிடம் ஒடக்கூடிய விடுதலை படத்திற்கு தணிக்கை குழு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. சிறையில் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்தும் காட்சி உள்ளதால் தணிக்கைக்குழு படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கொடுத்துள்ளது. இன்று கூட ஐநாக்ஸ் தியேட்டரில் குழந்தைகளுடன் படம் பார்க்க வந்த சிறுமிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்,கடுப்பான பெண் போலீசாரிடம் வாக்குவாதம் செய்தார். மேலும், என் குழந்தைகள் எந்த படம் பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு தெரியும், இது அடல்ட் படம் இல்லை, இது ஒரு புரட்சி படம் என்றார்.