சென்னை : விடுதலை திரைப்படம் ரூ 4 கோடியில் ஆரம்பித்து ரூ.40 கோடியில் முடிஞ்சுது என்று சினிமா பத்திரிக்கையாளர் சுவாரசியத் தகவலை பகிர்ந்துள்ளார்.
அசுரன் படத்திற்கு பின் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி உள்ள திரைப்படம் விடுதலை, இதில், விஜய் சேதுபதி, சூரி, கௌதம் மேனன், ராஜூவ் மேனன், பவானி ஸ்ரீ, சேத்தன் ஆகியோர் நடித்துள்ளனர்.
நேற்று திரையரங்கில் வெளியான விடுதலை படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனம் கிடைத்துள்ளது.
வெற்றிமாறனின் விடுதலை
சினிமா பத்திரிக்கையாளரான ராமானுஜம் பிலிமி பீட்டிற்கு அளித்துள்ள பேசியில், விடுதலைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவலை கூறியுள்ளார். அதில்,இயக்குநர் வெற்றிமாறனின் அனைத்துப்படங்களும் வெற்றிப்படங்கள் என்பதால், வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் ஒரு பிராண்ட். அவர் படங்களில் யார் நடித்தாலும், நடிகர்களை கடந்த அது வெற்றிமாறனின் படமாகத்தான் எக்ஸ்போஸ் செய்யப்படும். அந்த வகையில் நேற்று வெளியான வெற்றி மாறன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
மக்களிடம் எகிறிய எதிர்பார்ப்பு
வெற்றிமாறன் ஏதாவது ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதுகுறித்து அலசி ஆராய்ந்து படம் எடுப்பார் என்ற நம்பிக்கை அனைவருக்கும் இருப்பதால், விடுதலை படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புக்கு காரணம் வெற்றி மாறன், இளையராஜா காட்டு மல்லி பாடல். விடுதலை படத்தின் அறிவிப்பு வெளியாகி நீண்டநாட்களாகி விட்டது.
குறைவான பட்ஜெட்டில்
முதலில் குறைவான பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட இப்படம் முடிவில் பத்து மடங்காக அதிகரித்தது. இதனால், மக்களுக்கு இந்த படத்தில் என்ன இருக்கு என்று தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்தது. விடுதலை படத்திற்கு வந்த எதிர்மறையான செய்திகளும் படத்திற்கு பிளஸ்ஸாக மாறி படத்திற்கு நல்ல ஓபனிங்கை கொடுத்துள்ளது.
எகிறிய பட்ஜெட்
ஆரம்பத்தில் இந்த படம் 4 கோடியில் ஆரம்பிக்கப்பட்டது, முதலில் சூரி தான் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். அதன் பிறகு விஜய்சேதுபதி, கெளதம் மேனன், ராஜூவ் மேனன் என பல பிரபலங்கள் படத்திற்குள் வந்ததால், படத்தின் பட்ஜெட் ரூ 4 கோடியில் இருந்து பத்து மடங்கு அதிகரித்து ரூ 40 கோடியாக அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் என்னை விடுதலை செய்யுங்கப்பா என கதறும் நிலையிலும் கூட வெற்றி மாறன் இந்த படத்தை எடுத்தே தீருவேன் என பிடிவாதமாக இருந்தார்.
இரண்டு பாகத்திற்கு இதுதான் காரணம்
நக்சலைட் தொடர்பான திரைப்படம் என்பதால், தர்மபுரி காடு , மலை போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்றது. அந்த இடத்தில் படப்பிடிப்பு நடத்துவது கடினமாக இருந்ததால் படப்பிடிப்பு நீண்டுகொண்டே சென்று பட்ஜெட்டும் அதிகரித்தது. இதனால், தயாரிப்பாளருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் விடுதலை படத்தை இரண்டு பாகமாக வெளியிடலாம் என்ற முடிவை வெற்றிமாறன் எடுத்தார்.
டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம்
விடுதலை படத்தை வெளியீட்டுக்கு முன்பாகவே கிட்டத்தட்ட ரூ.55 கோடியில் டிஜிட்டல் உரிமம் மற்றும் சாட்டிலைட் உரிமத்தை வெற்றி மாறனே முன்நின்று வியாபாரம் செய்து கொடுத்துள்ளார். நேற்று வெளியான படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது. இருந்தாலும் திங்கட்கிழமைக்கு பிறகு தான் விடுதலை படம் குறித்த முழுமையான விவரம் தெரியவரும் என்று சினிமா பத்திரிக்கையாளர் ராமானுஜம் பிலிமிபீட் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார்.