இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான ‘விடுதலை’ இரண்டு பாகங்களாகத் திரைக்கு வரவிருக்கிறது. முதல் பாகம், படத்தின் கதைக்களம், அதன் மாந்தர்கள், அரசியல் பின்புலம் போன்றவற்றைக் கட்டமைத்து, அந்த உலகத்தை நமக்கு அறிமுகம் செய்யும் ஒன்றாக உருவாகியிருக்கிறது. ஒரு படைப்பாளராகத் தன் மேலிருக்கும் எதிர்பார்ப்புகளை மீண்டும் நிறைவேற்றியிருக்கிறாரா வெற்றிமாறன்?
1980களின் இறுதியில் அருமபுரி என்னும் இடத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுரங்கம் ஒன்றைக் கட்டமைத்து கனிம வளம் எடுக்க முடிவு செய்கிறது அரசு. அதற்கு எதிராகப் போராடுகிறார்கள் பெருமாள் (விஜய் சேதுபதி) தலைமையிலான தமிழ்நாடு மக்கள் படை இயக்கத்தினர். மக்கள் பயணிக்கும் ரயிலை வெடி வைத்துத் தகர்ப்பது, காவல் அதிகாரிகளைக் கொல்வது போன்ற செயல்களை அவர்கள் செய்வதாகக் காட்டப்படுகிறது. இந்நிலையில் கடைநிலை காவல் அதிகாரியான குமரேசன் (சூரி), பெருமாள் மற்றும் தமிழ்நாடு மக்கள் படை இயக்கத்தினரைப் பிடிக்க உருவாக்கப்பட்டிருக்கும் முகாமில் பணிக்குச் சேர்கிறார். அவருக்கும் மலையில் வாழும் கிராமப் பெண்ணான தமிழரசிக்கும் (பவானிஸ்ரீ) காதல் மலர்கிறது. சுயமரியாதை மிக்கவராகக் காட்டப்படும் குமரேசன், உயரதிகாரிகளால் சந்திக்கும் பிரச்னைகள், பெருமாள் இருக்கும் இடம் குறித்து அவர் கண்டறியும் ரகசியங்களால் ஏற்படும் சிக்கல்கள் என்பதாக நகர்கிறது இந்த ‘விடுதலை – பாகம் 1’.
காமெடி நடிகர் என்ற பிம்பம் சுத்தமாக மறைந்து அப்பாவியான, அதே சமயம் சுயமரியாதை கொண்டவரான காவல் அதிகாரி குமரேசனாக மட்டுமே நம் கண் முன் நிற்கிறார் சூரி. அவரையும் மீறி அவர் இயல்பாகவே சொல்லும் சில விஷயங்கள், கவுன்ட்டர்களாக மாறுவதைத் தாண்டி, எல்லா இடங்களிலும் அந்தப் பாத்திரமாகவே ஜொலித்திருக்கிறார் நடிகர் சூரி. விஜய் சேதுபதிக்கு ஒரு சில காட்சிகள் தாண்டி இந்த முதல் பாகத்தில் பெரிய வேலையில்லை. நாயகியாக பவானிஸ்ரீ தோற்றத்திலும் நடிப்பிலும் இயல்பான மலைவாழ் கிராமத்துப் பெண்ணாகவே வெளிப்பட்டிருக்கிறார்.
காவல் அதிகாரியாக வரும் சேத்தன் ஆணவம், கோபம், அதிகாரத் திமிர் போன்றவற்றைச் சிறப்பாக வெளிப்படுத்தி நம் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்கிறார். கௌதம் மேனன், கௌதம் மேனனாகவே தோன்றும் மற்றொரு படம் இது. அவரின் குழப்பமான கதாபாத்திர வரைவைத் தாண்டி, எல்லாப் படங்களிலும் அவரது நடிப்பும் ஒரே பரிமாணமாகவே வெளிப்படுவதும் சிக்கலே! நியாயமான அதிகாரியாக, அதே சமயம் சிஸ்டத்தில் சிக்குண்டு, முடிந்தளவு நல்லது செய்ய நினைக்கும் வேடத்தில் ‘டாணாக்காரன்’ இயக்குநர் தமிழ் ஈர்க்கிறார். மூணார் ரவி, ராஜீவ் மேனன், சந்திரன் எனச் சிறிய பாத்திரங்களில் தோன்றுபவர்களும் தேவையான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள்.
போலீஸின் அதிகாரத் திமிர் எளியவர்களை எப்படியெல்லாம் பாதிக்கிறது, விசாரணை என்ற பெயரில் மீறப்படும் மனித உரிமைகள், சட்டத்தைக் கையில் வைத்துக்கொண்டு நிகழ்த்தப்படும் என்கவுன்ட்டர்கள் என வெற்றிமாறனின் `விசாரணை’ களம் இதிலும் நீள்கிறது. காவல்துறை எப்படிச் செயல்படுகிறது, கேம்ப்பில் இருக்கும் கடைநிலை ஊழியர்கள் என்னென்ன இன்னல்களை எல்லாம் சந்திக்கிறார்கள், விசாரணை என்ற பெயரில் எளியவர்கள் எப்படியெல்லாம் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள் என்பதை விரிவான டீடெய்லிங்குடன் பதைபதைக்கும் வண்ணம் காட்சிப்படுத்தியிருக்கிறார்.
அதிகாரத்துக்கு எதிராகப் போராடுவதற்காக ஓர் இயக்கமாக ஒன்று திரள்பவர்களும் அதே வன்முறை பாதையைக் கையில் எடுக்கின்றனர். அதற்கு நியாயம் சேர்க்கும் தொனி படத்தில் ஆங்காங்கே வெளிப்பட்டாலும் இரண்டாம் பாகத்தில் அதற்கான பின்னணியும் காரணங்களும் விளக்கப்பட்டிருக்கும் என்பதைக் கடைசியில் வரும் டிரெய்லர் காட்சிகளின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனாலும் ஒரு தனிப்படமாகப் பார்க்கும்போது, சில இடங்களில் போலீஸின் பக்கம் படம் நிற்பதுபோன்ற ஓர் ஆபத்தும் இருக்கவே செய்கிறது.
மேலும் காவல்துறையைச் சித்திரிப்பதில் இருக்கும் டீட்டெய்லிங், தமிழ்நாடு மக்கள் படை என்னும் இயக்கம் குறித்த சித்திரிப்புகளில் இல்லை. `கதை முழுக்க கற்பனையே. யாரையும் நினைவுபடுத்தினால் அது தற்செயலே’ என்று வெற்றிமாறன் தப்பித்துக்கொண்டாலும் தமிழ்நாடு மக்கள் படை குறித்த சித்திரிப்புகள் சில மனிதர்களையும் இயக்கங்களையும் நினைவுபடுத்துகின்றன. ஆனால் வெவ்வேறு நிலப்பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்ககளில் செயற்பட்ட மனிதர்கள், இயக்கங்களை இணைத்து ஒரே கதைக்களத்துக்குள் கொண்டுவந்திருப்பது நிச்சயம் வரலாற்றுக்கு முரணே.
தவறே செய்யாமல் எதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்று சுயமரியாதையுடன் நிற்கும் சூரியின் பாத்திரம் சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் அவர் அவ்வளவு உறுதியுடன் நிற்பதற்கான எந்த அழுத்தமான காரணமும் இல்லை. மேலதிகாரி சேத்தனும் அவர் ஒரே ஒருமுறை மன்னிப்பு கேட்டால் போதும் என்று மீண்டும் மீண்டும் காத்திருப்பதும் புரியாத புதிர். பவானிஶ்ரீ உள்ளிட்ட அந்தக் கிராமத்து மக்கள் பழங்குடியினரா, தலித் மக்களா என்று காட்டுவதிலும் குழப்பம்.
காதல் காட்சிகள் நன்றாக எழுதப்பட்டு அழகாகவே படமாக்கப்பட்டிருந்தாலும் இரண்டு காதல் பாடல்கள் படத்தின் வேகத்தை மட்டுப்படுத்திவிடுகின்றன. இளையராஜாவின் பின்னணி இசை சில இடங்களில் ஆறுதலையும் சில இடங்களில் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. குறிப்பாக போலீஸ் தொடர் என்கவுன்ட்டர்கள் நிகழ்த்தும்போது வரும் அந்த ஹீரோயிஸ இசை அநாவசியமான ஒன்றாகவே படுகிறது. அதேபோல, சூரி தன் காதலியைக் காப்பாற்ற கேம்ப்பில் ஓடும் இடங்களில் வரும் அந்தச் சிறிய பாடலும் தேவையற்ற இடைச்செருகலாகவே ஒலிக்கிறது.
வேல்ராஜின் கேமரா மலை அழகை, அதன் பனிமூட்டத்தை, காட்டின் திகிலை, இரவின் ஒளியை அட்டகாசமாக அள்ளி வந்திருக்கிறது. அதேபோல அந்த ரயில் விபத்து தொடர்பான ஓப்பனிங் காட்சி சிங்கிள் ஷாட் போலவே கோக்கப்பட்டிருப்பது தொழில்நுட்ப பிரமாண்டம்! காட்டின் ஓசைகளைக்கூட அழகாகத் திரையில் பிரதிபலித்த ஒலிப்பதிவு குழு, நடிகர்களின் லிப் சின்க்கிலும் சற்றே கவனம் செலுத்தியிருக்கலாம். க்ளைமாக்ஸ் தேடுதல் வேட்டை காட்சியில் தன் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார் படத்தொகுப்பாளர் ராமர். ஆனால், படத்தில் ஒரு சில காட்சிகள் சரியாக முடிவடையாமல் அவசர கதியில் கடந்துபோன உணர்வே ஏற்படுகிறது.
இரண்டு பாகங்களாகப் படம் வெளிவருவதாலும், இந்த முதல் பாகத்தில் சில ட்விஸ்ட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாலும் உருவாகும் அரசியல் குழப்பங்களைச் சற்றே கவனித்துக் காட்சிப்படுத்தியிருந்தால் `விடுதலை’ அடுத்த பாகத்துக்கான எதிர்பார்ப்பு இன்னமுமே எகிறியிருக்கும். மற்றபடி, ஒரு ராவான ரியலிச சினிமாவாக உருவாகியிருக்கிறது `விடுதலை – பாகம் 1′.