சென்னை: நடிகர் விஜய் தற்போது லோகேஷ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் காஷ்மீர் ஷெட்யூல் நிறைவடைந்துள்ளது.
இன்னும் சில தினங்களில் சென்னையில் இதன் சூட்டிங் துவங்கவுள்ளது. விரைவில் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் தற்போதே மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
விஜய்யின் லியோ படம்
விக்ரம் படத்தில் அதிகமான நட்கத்திரங்களை ஒரே படத்தில் இணைத்து மாயாஜாலம் காட்டியிருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். அதே பாணியில் தற்போது லியோ படத்திலும் அதிகமான நடிகர்களுடன் களமிறங்கியுள்ளார். நடிகர் விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின் என அதிகமான நட்சத்திரப்பபட்டாளங்களுடன் லியோ படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடித்துவருவதாகவும் அவருடன் 6 வில்லன்கள் மோதவுள்ளதாகவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின.
விஜய்யின் 67வது படம்
விஜய்யின் பீஸ்ட், வாரிசு படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும் அதிகமான வசூலை குவித்தது. அது விஜய்யின் மாஸிற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. இந்நிலையில் விஜய்யின் 67வது படமாக உருவாகிவரும் லியோ படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே காணப்படுகிறது. இந்தப் படத்தின் அப்டேட்டிற்காக மாதக்கணக்கில் காத்திருந்த ரசிகர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதத்தின் துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்த அப்டேட்கள் கிடைத்து வருகின்றன.
முடிவடைந்த காஷ்மீர் சூட்டிங்
காஷ்மீரில் 50 நாட்கள் சூட்டிங்கை படக்குழுவினர் முடித்த நிலையில் இன்னும் சில தினங்களில் சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் துவங்கவுள்ளது. இதற்கான தயாரிப்புப் பணிகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். சென்னை சூட்டிங்கில் சஞ்சய் தத் உள்ளிட்டவர்களும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காஷ்மீரில் மிகுந்த குளிருக்கிடையில் பட்ட சிரமங்களை கடந்த சில தினங்களுக்கு முன்பு படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர். இதுவும் படத்தின் எதிர்பார்ப்பை அதிக அளவில் அதிகரித்துள்ளது.
விரைவில் சென்னை சூட்டிங்
நடிகர் விஜய் காஷ்மீர் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தற்போது ஓய்வில் உள்ளார். காஷ்மீரிலிருந்து அவர் சென்னை திரும்பிய அடுத்த நாளே நடிகர் அஜித்தின் தந்தை மறைந்தநிலையில், அஜித்தின் வீட்டிற்கு சென்று ஆறுதல் தெரிவித்திருந்தார். இதேபோல நேற்றைய தினம் தன்னை பார்க்க ஆர்வத்துடன் வீடியோ வெளியிட்ட குழந்தையின் ஆசையை நிறைவேற்றினார். இதனிடையே தன்னுடைய மகனின் விருப்பத்தை விஜய் நிறைவேற்றிய சம்பவம் குறித்து பிரபல பத்திரிகையாளர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஏழை மாணவிக்கு உதவிய விஜ்ய்
பள்ளியில் அதிகமான மதிப்பெண் எடுத்து ஏழ்மையான சூழ்நிலையால் வீட்டில் வேலை பார்த்துவந்த மாணவி குறித்து தான் பேட்டி எடுத்து செய்தியாக பத்திரிகையில் வெளியிட்டதாகவும் அதைப் பார்த்த விஜய், தன்னை நேரில் அழைத்து பேசியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அப்போது அந்த செய்தியை காட்டி பேசிய விஜய், அந்த செய்தியை தான் பார்த்ததாகவும் தன்னுடைய மகன் சஞ்சய்யும் பார்த்து கண்கலங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
விஜய்யிடம் கண்கலங்கிய சஞ்சய்
தொடர்ந்து அந்தப் பெண்ணிற்கு உதவி செய்யுமாறு தன்னிடம் கேட்டுக் கொண்டதாகவும் விஜய் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அந்தப் பெண்ணை நேரில் சந்தித்த விஜய், சென்னையில் பிரபல இன்ஜினீயரிங் கல்லூரியில் சேர்த்து படிக்க வைத்ததாகவும் அந்த பத்திரிகையாளர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். அதிகமான விளம்பரங்கள் இல்லாமல் பல உதவிகளை செய்து வரும் விஜய் பலரது வாழ்க்கைக்கு ஆதாரமாக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
இயக்குநராக சஞ்சய்
விஜய்யின் மகன் சஞ்சய் அவரை போலவே ஹீரோவாக வேண்டும் என்பதே விஜய் ரசிகர்களின் கனவாக உள்ளது. ஆனால் சஞ்சய்க்கு இயக்கத்தில்தான் அதிக ஆர்வம் என்று விஜய்யே ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது சஞ்சய் குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் சில தினங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. மேலும் சஞ்சய் சூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும்படியான புகைப்படங்களும் வெளியாகி வருகின்றன.