திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் 4ம் பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தமும், 5ம் பிரகாரத்தில் சிவகங்கை தீர்த்தமும் அமைந்துள்ளது. பாதுகாப்பையொட்டி இந்த குளத்தில் பக்தர்கள் இறங்கவும், புனித நீராடவும் அனுமதியில்லை. சுவாமி தீர்த்தவாரி நடைபெறும்போது மட்டும், கோயில் குளத்துக்குள் இறங்க சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், கோயில் 4ம் பிரகாரத்தில் உள்ள பிரம்ம தீர்த்த குளத்தில் நூற்றுக்கணக்கான மீன்கள் நேற்று செத்து மிதந்தன. அதனை பார்த்த பக்தர்கள் வேதனை அடைந்தனர். மிதந்த மீன்களை கோயில் ஊழியர்கள் அகற்றினர். கடந்த சில நாட்களாக திருவண்ணாமலையில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன் காரணமாக வெப்பம் தாங்காமலும், ஆக்சிஜன் பற்றாக்குறையாலும் மீன்கள் செத்திருக்கலாம் என கூறப்படுகிறது.