வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
நியூயார்க்: அமெரிக்காவின் மத்திய மேற்கு மற்றும் தெற்கு பகுதியான அர்கான்சஸ், இலினாய்ஸ் மாகாணங்களில் கடும் சூறாவளி காற்று வீசியதில் 26 பேர் பலியாகினர்; ஏராளமானோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் அர்கான்சஸ் மாகாணத்தின் லிட்டில் ராக் பகுதியை நேற்று முன்தினம் பலத்த சூறாவளி தாக்கியது.
வீசிய சூறைக்காற்றில், சாலையோரங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன; ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதேபோல் வெய்ன் நகரில் வீசிய சூறைக்காற்றால் குடியிருப்புகள் இடிந்து தரைமட்டமாகின. இடிபாடுகளில் சிக்கிய ஏராளமானோரை போலீசார் மீட்டனர். சூறாவளியில் சிக்கி, அர்கான்சஸ் மாகாணத்தில் அதிகம் பேர் பலியாகினர்; 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இலினாய்ஸ் மாகாணத்தின் பெல்விதேர் பகுதியில் உள்ள திரையரங்கின் மேற்கூரை, சூறாவளி காற்றால் பெயர்ந்து விழுந்தது.
அப்போது திரையரங்கில் இருந்த 200க்கும் மேற்பட்டோர் பீதியில் அலறியடித்து வெளியேறினர். இதில் 2 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதற்கிடையே வரும் 10ம் தேதி வரை, இதுபோல் சூறாவளி வீசக்கூடும் என அமெரிக்க வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
Advertisement