பாட்னா, பிரதமர் நரேந்திர மோடி குறித்து, அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், வரும், 12ல் நேரில் ஆஜராகும்படி, காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு, பாட்னா நீதிமன்றம் ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.
கடந்த, 2019 லோக்சபா தேர்தல் பிரசாரத்தின் போது, கர்நாடகாவில் பேசிய, காங்., முன்னாள் தலைவர் ராகுல், ‘நாட்டில் உள்ள திருடர்கள் பெயர்கள், மோடி என்ற பெயரில் இருப்பது ஏன்’ என, தெரிவித்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்த, பா.ஜ., தலைவர்கள், ‘பிரதமர் மோடி மற்றும் மோடி சமூகத்தை ராகுல் அவமதித்து விட்டார்’ என, கருத்துத் தெரிவித்தனர். மேலும், ராகுலுக்கு எதிராக பல்வேறு இடங்களில், பா.ஜ., சார்பில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் தொடரப்பட்ட வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு அளித்த சூரத் நீதிமன்றம், ராகுலை குற்றவாளி என அறிவித்து, அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, வயநாடு லோக்சபா தொகுதி, எம்.பி., பதவியில் இருந்து, ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். மேலும், புதுடில்லியில் வசித்து வரும் அரசு பங்களாவை காலி செய்யும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் மோடி குறித்து, அவதுாறாக பேசியதாக தொடரப்பட்ட மற்றொரு வழக்கில், வரும், 12ல் நேரில் ஆஜராகும்படி, பீஹாரின் பாட்னாவில் உள்ள, எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் மீதான குற்றங்களை விசாரிக்கும் நீதிமன்றம், ராகுலுக்கு, ‘சம்மன்’ அனுப்பி உள்ளது.
பா.ஜ., மூத்தத் தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான சுஷில் குமார் மோடி தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டு உள்ளது. வரும், 12ல், பாட்னா நீதிமன்றத்தில் ராகுல் ஆஜராக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, ‘மகாத்மா காந்தி படுகொலைக்கு, ஆர்.எஸ்.எஸ்., தான் காரணம்’ என, ராகுல் கூறியதாக, 2014ல், மஹாராஷ்டிர மாநிலம் தானேவில் தொடரப்பட்ட அவதுாறு வழக்கில், நேரில் ஆஜராவதில் இருந்து முழு விலக்கு கோரி, ராகுல் சார்பில் தானே நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை நேற்று முடிவடைந்ததை அடுத்து, வரும், 15க்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இதில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.