ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது – எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்று முதல் முறையாக சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான சேலம் மாவட்டத்திற்கு வந்தார். சென்னையில் இருந்து கார் மூலம் வந்த அவருக்கு ஒவ்வொரு மாவட்டங்கள் தோறும் மாவட்ட எல்லையிலும் மாவட்ட மையப் பகுதிகளிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மாலை சுமார் 5 மணி அளவில் சேலம் மாநகர எல்லைக்கு வந்த அவருக்கு சேலம் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது

ஆயிரக்கணக்கான பெண்கள் நீண்ட வரிசையில் கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். மேலும், வழிநடகிலும் தாரை தப்பட்டை கோலாட்டம் மயிலாட்டம் ஒயிலாட்டம் தப்பாட்டம் மற்றும் குத்தாட்டம் என வரவேற்பு கலை கட்டியது. இதனால் சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் இந்த வரவேற்பு இருந்ததால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாயினர். இதனைத் தொடர்ந்து தொணர்களின் வரவேற்புக்கு மத்தியில் மேடைக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை, மாலை வேல் மற்றும் வாள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

பின்னர் பேசிய எடப்பாடி பழனிசாமி, தற்போது அதிமுகவின் பலம் மக்களிடையே பெருகி வருகிறது. தொண்டர்கள் பலம் நிறைந்த அதிமுக மிகப்பெரிய ஜனநாயக கட்சியாக விளங்குவதாக தெரிவித்தார். இன்றைக்கு எதிர்கட்சிகளே இருக்கக்கூடாது என திமுக அரசு நினைப்பதாகவும், எதிர்க்கட்சி தலைவர்கள் மீது வழக்கு மேல் வழக்கு போட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதற்கெல்லாம் அதிமுக ஒரு போதும் அஞ்சாது என்றார். காவல் துறையினர்  பொய் வழக்கு பதிவு செய்து வருவதாகவும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்

எதிர்க்கட்சிகளை அழிக்க வேண்டும் ஒழிக்க வேண்டும் என திமுக நினைக்கிறது. அவர்களின் எண்ணம் கானல் நீர் ஆகும் என்றார். வழக்கு மேல் வழக்கு போட்டாலும் எதிர்நீச்சல் மேற்கொண்டு அதனை தவிடுபொடியாக்குவோம் என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த ஸ்டாலின் அல்ல ஓராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை தொட்டுக் கூட பார்க்க முடியாது என்றும் சூளூரைத்தார். தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கிவிட்டது. மின் தடையும் ஆரம்பமாக்கிவிட்டது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் மின்தடை என்பது தவிர்க்க முடியாது. அந்த அளவிற்கு ஆட்சியின் அவலம் இருப்பதாக தெரிவித்தார்

தமிழகத்தில் கொலை கொள்ளை வழிப்பறி போன்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது. முதியவர்கள் தனிமையில் இருப்பவர்களை குறிவைத்து அவர்களை கொலை செய்து கொள்ளையடிக்கும் சம்பவமும் அதிகரித்துள்ளது. மாணவர்கள் இளைய சமுதாயத்தினர் போதை பொருட்களால் சீரழிகின்றனர். இதுதான் திராவிட மாடல் ஆட்சி என்றார். இதுக்கெல்லாம் முடிவு கட்ட நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் 40க்கு 40 என்ற வெற்றி இலக்கை அடைவோம் அதற்காக அனைத்து நிர்வாகிகளும் ஒன்றிணைந்து ஒருமித்த கருத்தோடு பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.