பெங்களூரு: பழம்பெரும் கன்னட நடிகை லீலாவதி (85), தமிழில், ‘பட்டினத்தார்’, ‘வளர்பிறை’, ‘அவள் ஒரு தொடர்கதை’, ‘அவர்கள்’, ‘நான் அவனில்லை’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பல மொழிகளில் 500க்கு மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பெங்களூருவை அடுத்த சோலதேவனஹல்லி மலைப்பகுதியில் உள்ள பண்ணை வீட்டில்தான் தற்போது லீலாவதி வசித்து வருகிறார். இவரது மகன் வினோத் ராஜூ கன்னட சினிமாவில் நடிகராக இருக்கிறார்.
சோலதேவனஹல்லியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை சமீபத்தில்தான் லீலாவதி கட்டினார். இதன் மூலம் ஏழைகள் பயன்பட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இப்போது கால்நடை மருத்துவமனை ஒன்றைக் கட்டி வருகிறார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘கால்நடைகளுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். அதனால், கால்நடை மருத்துவமனை கட்ட முடிவு செய்தேன். பணிகள் முடிந்ததும் மருத்துவர்களை நியமிக்க முதல்வர் பசவராஜ் பொம்மையை கேட்டுக்கொள்கிறேன்’ என்றார். கோடிகளில் சம்பளம் வாங்கும் ஹீரோக்கள் கூட இதுபோன்ற சமூக பணிகளில் ஈடுபடாதபோது, அம்மா நடிகையான லீலாவதி, இத்தகைய தொண்டு வேலைகளில் ஈடுபட்டு வருவதை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகிறார்கள்.