தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர் “கூட்டனி குறித்து அமித்ஷா சொன்ன கருத்துக்களை முழுமையாக புரிந்து கொள்ள இந்தி தெரிந்திருக்க வேண்டும். பாஜகவை வழிநடத்திச் செல்வது தலைவராக என்னுடைய கடமை. கூட்டணியை முடிவு செய்வது அமித்ஷா மற்றும் நட்டா போன்றோர் தான். 2024, 2026, 2030 போன்ற தேர்தல்கள் எப்படி இருக்கும் என்ற கருத்துக்களை அமித்ஷா உடனான சந்திப்பின்போது தெரிவித்துள்ளேன்.
2024 ஆம் ஆண்டு தேர்தலில் நான் நின்றால் கிளீன் பாலிடிக்ஸை பார்ப்பீர்கள் . தேசியத் தலைவரின் முடிவுகளுக்கு கட்டுப்படுவேன். அதிமுக கூட்டணியில் உள்ள கொள்கை, எங்கு நிற்க வேண்டும், எத்தனை சீட்டுகள் என்பதில் தான் வாதம் செல்கிறது. எதுவும் இங்கே கல்லில் எழுதப்பட்டது கிடையாது. மாநிலத் தலைவராக என்னுடைய கருத்தை தெரிவித்து இருக்கிறேன் அவ்வளவுதான்” என பேசினார்.
அப்பொழுது செய்தியாளர் ஒருவர் ஆருத்ரா நிதி நிறுவன மோசடியில் பாஜக நிர்வாகிக்கு தொடர்பு இருப்பது குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அவர் “16 சதவீதத்திற்கும் மேலே வட்டி கொடுப்பதாக ஆருத்ரா போன்ற நிறுவனங்கள் மோசடி செய்த ஏகப்பட்ட மக்கள் பணம் மீட்கப்பட்டது வெறும் 5%க்கு குறைவான பணம் தான். முதலீடு செய்யும் முதல் 2000 நபர்கள் இந்த பணத்தை எடுத்துச் சென்று விடுவார்கள். ஆருத்ரா போன்ற நிதி நிறுவனங்களால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.
இந்த குற்றச் செயலில் பாஜக நிர்வாகி மட்டும் அல்ல யாராக இருந்தாலும் தவறான முறையில் முதலீடு செய்து ஒரு ரூபாய் சென்று இருந்தாலும் கூட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆருத்ரா மட்டுமில்லாமல் தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட நிதி நிறுவனங்கள் ரூ.8000 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளனர். தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது முதலும் முடிவுமாக இருக்க வேண்டும்” என செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்தார். ஆருத்ரா நிறுவனத்தின் மூலம் சுமார் 2500 கோடி ரூபாய் மக்கள் பணம் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 25க்கும் நிறுவனங்கள் இது போன்று உள்ளதாக அண்ணாமலை கூறியுள்ள கருத்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.