போபால்: இந்தியாவிலிருந்து பிரிந்தது தவறு என்று பாகிஸ்தான் மக்கள் நினைக்கின்றனர் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நேற்று முன்தினம் நடைபெற்ற புரட்சியாளரும், சுதந்திரப் போராட்ட வீரருமான ஹேமுகாலனியின் பிறந்தநாள் நூற்றாண்டு விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கலந்து கொண்டார். இவ்விழாவில் நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து வந்த சிந்தி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் மோகன் பாகவத் பேசியதாவது: அகண்ட பாரதம் என்பது உண்மை. பிளவுபட்டிருக்கும் பாரதம் ஒரு கொடுமையான கனவு. கடந்த 1947-க்கு முன்பு ஒரு பாரதம் இருந்தது.
ஒருங்கிணைந்த இந்தியா, ‘பாகிஸ்தான் – இந்தியா’ என 2 தேசங்களாக பிரிவினை கண்டபோது, பொது மக்கள் தாங்கள் விரும்பிய தேசங்களுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். அப்படி பாகிஸ்தானுக்கு சென்றவர்கள் இன்று வருந்தி வருகின்றனர். அங்கு இப்போதும் வலிகள் இருக்கின்றன.
அதற்காக பாகிஸ்தான் மீது பாரதம் தாக்குதல் தொடுக்க வேண்டும் என்று நான் சொல்லவில்லை. மற்றவர்கள் மீது வலிந்து தாக்கும் கலாச்சாரத்துக்கு நாம் எதிரானவர்கள் என்பதே உண்மை. தற்காப்புக்காக மட்டும் தாக்குதல் நடத்துவதே நம்முடைய கலாச்சாரம். இதற்கு முன்பும் அப்படிச் செய்திருக்கிறோம். இனிமேலும் செய்வோம்.
இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றது தவறு என்று பாகிஸ்தான் மக்கள் நினைக்கின்றனர். அனைவரும் அதைத் தவறு என்று கூறுகிறார்கள். எது சரியோ அதுநிலையாக இருக்கும். தவறானவைகள் வந்து வந்து போகும்.
உங்களின் செழுமையான சிந்தி கலாச்சாரம் மற்றும் விழுமியங்களுக்காக பிரிவினையின் போது அந்த பாரதத்தில் இருந்து இந்த பாரதத்துக்கு வந்த உங்கள் அனைவரையும் நான் பாராட்டுகிறேன். இவ்வாறு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறினார்.