திமுகவுக்கு ஆதரவாக ஓ பன்னீர்செல்வம் செயல்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டு, அதிமுகவில் உட்கட்சிப் பூசலை உண்டாக்கியது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி பக்கம் திரண்ட மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், ஓபிஎஸ்-க்கு எதிரான பல கருத்துக்களை தெரிவித்து வந்தனர்.
இதற்கிடையே அதிமுகவில் ஒற்றை தலைமை தேவை. அப்போதுதான் கட்சியை பலப்படுத்த முடியும் என்ற முடிவுக்கு மூத்த நிர்வாகிகள் முடிவுக்கு வந்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் ஓ பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக, ஒற்றைத் தலைமையாக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இது குறித்த நீதிமன்ற வழக்குகளில் ஓ பன்னீர்செல்வத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், அதிமுகவின் பொது செயலாளர் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தற்போது ஓ பன்னீர்செல்வம் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்து உள்ள வழக்கை நம்பி மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
அதே சமயத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச் செயலாளராக, அதிமுகவை வலிமையாக்கும் முயற்சியில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்.
மேலும் கூட்டணி விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித்ஷாவை சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம், பிரதமர் மோடி தமிழகம் வரும் போது ஓ பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வாய்ப்பு உள்ளதா? நீங்கள் இருவரில் யாரை சந்திக்க பரிந்துரை செய்வீர்கள் என்ற கேள்வியை எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அண்ணாமலை, “பிரதமரை யார் பார்க்க வேண்டும் என்று, பிரதமர் அலுவலகத்தில் என்னுடைய விருப்பத்தை தெரிவித்தாலும் கூட, அதனை பிரதமர் அலுவலகம் பரிசளித்து பார்ப்பதற்கு உண்டான நேரம் கொடுப்பார்கள்.
பிரதமர் அவர்கள் எப்போது தமிழகம் வந்தாலும் தமிழக மக்கள் இடையே உற்சாகம் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும். பிரதமர் தமிழகம் வரும்போது எல்லாம் தமிழகம் அடுத்த கட்டத்திற்கு செல்லும். இந்த முறை பிரதமர் தமிழகம் வரும்போது, அப்படியான ஒரு அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு உண்டான ஒரு சூழ்நிலையை உருவாகி உள்ளது” என்றார்.