எஸ்சி/எஸ்டி மக்களின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தினை சிலர் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருவது வாடிக்கையாகியுள்ளது. பழிவாங்கும் நோக்குடன் இந்த சட்டம் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில் வன்கொடுமை வழக்கில் ஜாமின் கோரும் போது உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளையும் கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமை என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
இரு தரப்பினரிடையே நிகழ்ந்த மோதலில் வன்கொடுமை உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒரு பிரிவினருக்கு மட்டும் ஜாமின் அளிக்கப்பட்டது. இந்த ஜாமினை ரத்து செய்ய கோரிய உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி. ஜெகதீஸ் சந்திரா அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் முடிவில் மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஜாமின் மனுவை உரிய முறையில் பரிசீலித்திருந்தால் அதனை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. விசாரணை நீதிமன்றம் ஆட்சேபத்தையும் பதிவு செய்து செயற்கையான முறையில் ஜாமின் வழங்கியுள்ளது என நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான துன்புறுத்தல், அவமரியாதை மற்றும் அவமானத்தை தடுத்திடும் வகையில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் உருவாக்கப்பட்டது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். உயர் சாதியினருக்கு எதிரான ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு முடிவெடுக்க வேண்டியது விசாரணை நீதிமன்றத்தின் கடமை என கூறி வழக்கை மீண்டும் திருப்பி அனுப்பி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.