உயிரை பறிக்கும் மார்பர்க் வைரஸ் ஆப்ரிக்காவில் வேகமாக பரவுகிறது| Deadly Marburg virus spreads rapidly in Africa

வாஷிங்டன்-கடுமையான காய்ச்சல், தலைவலி, ரத்தக் கசிவு ஏற்படுத்தி உயிரைக் கொல்லும் தீவிரம் உடைய, ‘மார்பர்க் வைரஸ்’ ஆப்ரிக்காவில் வேகமாக பரவி வருகிறது.

மேற்கு ஆப்ரிக்க நாடான கினியில், மார்பர்க் வைரஸ் பரவல் இருப்பது கடந்த பிப்ரவரி மாதம் கண்டறியப்பட்டது. இதுவரை ஒன்பது பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதை உலக சுகாதார நிறுவனம் உறுதி செய்துள்ளது. மேலும், 20 பேருக்கு அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

ஆப்ரிக்காவில் உள்ள பழந்தின்னி வவ்வால்களிடம் இருந்து இந்த வைரஸ் பரவுகிறது. இந்த வைரஸ் வவ்வால்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை.

எபோலா வைரசை போல மிக தீவிரமான பாதிப்புகளை மார்பர்க் ஏற்படுத்துகிறது. கடுமையான காய்ச்சல், தலைவலி, உள் உறுப்புகள் மற்றும் உடலில் வெளிப்புறங்களில் ரத்தக் கசிவு போன்றவை மார்பர்க் வைரசின் அறிகுறிகள் என, மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த வைரஸ் 88 சதவீதம் உயிரிழப்புகளை ஏற்படுத்துகிறது.

வைரசால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருப்பவர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது. உடலில் உள்ள வெட்டுக் காயம், வியர்வை உள்ளிட்டவை வாயிலாக தொற்று பரவுகிறது.

latest tamil news

தற்போது மேற்கு ஆப்ரிக்க நாடுகளான கினி மற்றும் தான்சானியாவில் வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளது.

ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, அமெரிக்காவின் சி.டி.சி., எனப்படும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் எச்சரித்துள்ளது.

22 நாடுகளில் உருமாறிய கொரோனா

கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் ஒரே நாளில் 3,824 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த திடீர் உயர்வுக்கு, எக்ஸ்பிபி.1.16 என்ற உருமாறிய ஒமைக்ரான் வகையே காரணம் என, உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வகை உருமாறிய வைரஸ் 22 நாடுகளில் கண்டறியப்பட்டதாகவும், இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பரவி உள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.