பெங்களூரு: கர்நாடகாவில் வருகிற மே 10-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பிற கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளை இழுக்கும் முயற்சியில் காங்கிரஸும், பாஜகவும் ஈடுபட்டுள்ளன.
கடந்த வாரத்தில் பாஜக எம்எல்சிக்கள் புட்டண்ணா, பாபுராவ் சின்சிஞ்சூர் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரஸில் இணைந்தனர். இதைத் தொடர்ந்து மஜத எம்எல்ஏ சீனிவாஸ் அக்கட்சியில் இருந்து விலகி, தனது பதவியை ராஜினாமா செய்தார். இவரும் காங்கிரஸில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று பெல்லாரி மாவட்டம் குடிலகி தொகுதி பாஜக எம்எல்ஏ என்.ஒய்.கோபாலகிருஷ்ணா, சட்டப்பேரவைத் தலைவர் விஸ்வேஸ்வர் ஹெக்டே காகேரியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார். மேலும் இவர் பாஜகவில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார். இதையடுத்து பெங்களூருவில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமாரை சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸில் இணைவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹாசன் மாவட்டம் அரக்குல்கூட் தொகுதியின் மஜத எம்எல்ஏ ஏ.டி.ராமசாமியும் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் டெல்லியில் நேற்று இவர் பாஜகவில் இணைந்தார்.
தேர்தல் நெருங்கும் நிலையில் இரு எம்எல்ஏக்கள் தங்களது கட்சிகளில் இருந்து விலகி, புதிய கட்சியில் இணைந்திருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.