பீஜிங்-சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, காதல் செய்வதற்காக கல்லுாரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவில், கொரோனாவுக்கு பின், பிறப்பு, இறப்பு விகிதங்களில் பெரும் மாற்றம் நிகழ்ந்துள்ளது. 141 கோடி மக்கள் தொகை உடைய அந்த நாட்டில், சில ஆண்டுகளாக இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதே போல் குழந்தை பிறப்பு விகிதமும் சரிந்துள்ளது. இதன்படி, சீனாவின் பிறப்பு விகிதம், 2022-ல், 1,000 பேருக்கு, 7.52 என்ற அளவில் இருந்தது. அது தற்போது, 6.77 என்ற அளவில் குறைந்துள்ளது.
இந்நிலையில், சீனாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, காதல் செய்வதற்காக கல்லுாரி மாணவர்களுக்கு ஒரு வாரம் விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
அரசின் அனுமதியுடன் கூடிய இந்தத் திட்டத்திற்கு, ஒன்பது கல்லுாரிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. மியான்யாங் பிளையிங் கல்லுாரி, இது குறித்த அறிவிப்பை முதன் முதலில் வெளியிட்டது.
அதன்படி, ஏப்., 1 – 7 வரை காதல் செய்வதற்கு மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
விடுமுறை காலத்தில், இயற்கை மற்றும் வாழ்க்கையை காதலிக்கவும், விடுமுறையை அனுபவித்து காதலை கொண்டாடவும் மாணவர்களுக்கு கல்லுாரி நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
மேலும், டைரி எழுதுவது, தனிநபர் மேம்பாடு பற்றிய அளவீடுகளை பராமரித்தல், பயண வீடியோக்களை எடுத்து வருதல் ஆகியவை குறித்து, வீட்டுப்பாடமும்மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.