காதலின் வலி(மை)…!! திருமணம் முடிந்த பின், காதலருடன் சேர்த்து வைக்க கோரி மணமகள் ஆர்ப்பாட்டம்

புதுடெல்லி,

பெற்றோரின் விருப்பத்திற்கு திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண் ஒருவர், காவல் நிலையத்தில் வைத்து, தனக்கு காதலருடன் திருமணம் செய்து வைக்க வேண்டும் என கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலானது.

அந்த வீடியோவில் மணமகள் உடையில் இருந்த பெண், இரண்டு திருமணம் செய்ய வேண்டும். இரண்டு திருமணம் என்று தொடர்ந்து கூறியபடி காணப்படுகிறார். சுற்றி நிற்பவர்களில் சிலர் வேடிக்கை பார்த்து கொண்டும், ஒரு சிலர் மும்முரமுடன் மொபைல் போனில் படம் பிடித்தபடியும் உள்ளனர்.

அந்த பெண் எதனையும் கவனம் கொள்ளாமல் தொடர்ந்து காதலருடனான திருமணம் பற்றி கத்தியபடி இருக்கிறார். ஒருவர் மீது கொண்ட மிகை அன்பால், தனது உண்மையான அன்பை நிரூபிக்கும் வகையில், நம்பிக்கையற்று போன நிலையில் அந்த பெண்ணின் நிலைமை பார்ப்பவர்களை சோகம் கொள்ள செய்யும்படி உள்ளது.

பெண் காவலர்கள் அவரை பார்த்தபடி அமைதியாக நிற்கின்றனர். இதன்பின்பு, ஒரு பெண் காவலர் அவரை கட்டுப்படுத்த முயலும்போது, மணமகள் கையில் இருந்த செல்போனையும், காகிதங்களையும் தூர வீசி எறிகிறார்.

இதனை தொடர்ந்து, பெண் காவலர் அந்த பெண்ணை இழுத்து கொண்டு, காவல் நிலைய அறைக்குள் செல்கிறார். பின்னாலேயே மற்றொரு பெண் காவலரும் செல்கிறார். தொடர்ந்து கத்தியபடி, கூச்சலிட்டதில் களைத்து போனது போன்று, மணமகள் சற்று தள்ளாடியபடியே காணப்படுகிறார்.

இந்த பெண் தனது காதலுக்காக ஆர்ப்பாட்டம் செய்தபோதும், மணமகனின் நிலைமை மிக மோசம் என்றும் எண்ண தோன்றுகிறது. சமத்துவம் என்றால் இதிலும் வேண்டுமல்லவா? என்று அந்த வீடியோ தலைப்பு தெரிவிக்கின்றது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.