பட்டாசு இல்லையெனில் தீபாவளி இனிப்பு இனிக்காது; உணவு ருசிக்காது. 5 வயது குழந்தைகள் முதல் அறுபது வயது பெரியவர்கள் வரையில் விரும்புவது பட்டாசுதான். இதுதவிர திருமண விழா, தேர்தல் வெற்றி, தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் அனைத்துவிதமான விழாக்களில் ஏன் இறப்பில் கூட பட்டாசுகள் இடம் பெறுகிறது. ரகவாரியாக எண்ணற்ற பட்டாசு ரகங்கள், மண்ணிலும், விண்ணிலும் வர்ண ஜாலங்களை ஏற்படுத்துகின்றன. கொண்டாட்டங்களுக்கு நாம் பயன்படுத்தும் பட்டாசு ரகங்கள் சில நேரங்களில் திண்டாட்டங்களை தந்து விடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் காஞ்சிபுரம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் 10 பேர் பலியாயினர். இதுபோன்ற உயிர்ப்பலி சம்பவங்கள் தொடர்கதையாகவே உள்ளன. இதனால் ஏராளமான குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன.
தமிழகத்தில் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பட்டாசு தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் விருதுநகர் மாவட்டத்தில்தான் அதிக அளவில் உற்பத்தி நடக்கிறது. ‘குட்டி ஜப்பான்’ என்றழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் என 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இத்தொழிலை நம்பி நேரடியாக 2 லட்சம், மறைமுகமாக 3 லட்சம் என மொத்தம் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இம்மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் பட்டாசுத் தொழில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. மனிதர்களை மகிழ்வித்திட பட்டாசுகள் பயன்பட்டு வரும் நிலையில், அதை உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் துன்புறும் வகையில் திடீர் விபத்துகள், உயிர்ப்பலிகள் நிகழ்வது தொடர் கதையாகி வருகிறது.
காரணம் என்ன?
பட்டாசு ஆலையில் விபத்துகள் நடைபெற பல்வேறு காரணங்கள் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலர் (டி.ஆர்.ஓ) உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகளில் திரி தயாரிக்க அனுமதி கிடையாது. ஆனால், சில பட்டாசு ஆலைகள் மறைமுகமாக திரிகள் தயாரிக்கும்போது விபத்து ஏற்படுகிறது. கருந்திரி தயாரிக்க, காகிதத்தை சுற்றுதல், பசை போடுதல், கரி மருந்து ஏற்றுதல், திரி வெட்டுதல் ஆகிய பணிகள் செய்ய 10க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தேவைப்படுவர். இதற்கான கூலியை மிச்சப்படுத்த பல ஆலை உரிமையாளர்கள், அனுமதியின்றி சட்ட விரோதமாக வீடுகளில் பட்டாசுத் திரிகளை தயாரிக்கச் செய்து தங்களது ஆலைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.
இதேபோல், பட்டாசு தயாரிக்கும்போது தொழிலாளர்கள் வெப்பம் அதிகரிக்காமல் இருக்க, ரப்பர் ஷீட்டில் தான் அமர்ந்திருக்க வேண்டும். திரிகளை பித்தளை கத்தியால் வெட்ட வேண்டும் என்பதெல்லாம் விதிமுறை. ஆனால், இவை பின்பற்றப்படுவதில்லை. மாறாக அவசர கதியில் இரும்பு கத்தியால் திரிகளை வெட்டும் போது வெப்பம் அதிகரித்து விபத்து ஏற்படுகிறது.
கழிவுகளால் வெடி விபத்து நாள்தோறும் பட்டாசு தயாரிப்பு பணி முடிந்தவுடன் கழிவு பட்டாசுகளை ஆலைக்கு வெளியே ஒதுக்குப்புறத்தில் கொண்டு போய் அழிக்க வேண்டும். கழிவுகளை கொட்டி அங்கிருந்து சுமார் 50 மீட்டர் தூரம் வரை திரியை இணைத்து, போர்மேன் கண்காணிப்பில் கொளுத்த வேண்டும்.
ஆனால், ஆலையின் உள்ளேயே நாள்தோறும் அலட்சிய போக்குடன் தீயிட்டு கொளுத்தும்போது விபத்து ஏற்படுகிறது. எரிக்கப்பட்ட பட்டாசுக் கழிவுகளில் தண்ணீர் ஊற்றி அணைக்காமல், மறுநாளும் அதே இடத்தில் பட்டாசு கழிவுகளை கொட்டும்போது சில நேரங்களில் அங்குள்ள அணையா நெருப்பினால் கண் இமைக்கும் நேரத்தில் பட்டாசுகள் வெடித்து விபத்து ஏற்படுகிறது.
‘சங்கு… ஊதுது சங்கு…’
பென்சில், சங்கு சக்கரம், பூந்தொட்டி ஆகிய பட்டாசுகளின் நுனியில் வேதிமருந்து செலுத்த வேண்டும். இம்மருந்தை மீதமின்றி பயன்படுத்த வேண்டும். மீதமிருந்தால் முறைப்படி அகற்ற வேண்டும். இதைச் செய்யாதபோது வேதி மாற்றம் ஏற்பட்டு உடனே வெடி விபத்து ஏற்படும். அதேபோல், பட்டாசு தயாரிக்க தேவையான மூலப் பொருட்களான அலுமினிய பவுடர், சல்பர், பேரியம் நைட்ரேட் ஆகிய வேதிப் பொருட்களை கலந்து, பணியாளர்களுக்கு அன்றாடம் தேவையான அளவை எடையாளர் வழங்குவார். அளவுக்கு அதிகமாக ஒரே நேரத்தில் கொண்டு செல்லும் போதும் விபத்து ஏற்படுகிறது.
அளவுக்கு மீறினால்…
வைப்பறைகளில் குறிப்பிட்ட அளவை மீறி பட்டாசுகளை இருப்பு வைப்பதும் விபத்தைத் தருகிறது. பேன்சி ரக வெடிகள் தயாரிப்பின்போது காகித குழாய்களில் வேதிப்பொருட்கள் செலுத்தப்பட்டு கவனமாக உராய்வு ஏற்படாதவாறு பாதுகாப்பாக பொருள் வைப்பறைக்கு கொண்டு செல்வது அவசியம். தயாரித்த வெடிகளை சாக்குகளில் உலர வைத்திருக்கும்போது, இருவர் சேர்ந்து மொத்தமாக தூக்கிச் செல்ல வேண்டும். சாக்கை அப்படியே இழுப்பதாலும் விபத்து ஏற்படுகிறது. வெடி கீழிருந்து உயரே செல்ல ஒரு வேதிப்பொருளும், உயரே சென்று வெடிக்க வேறொரு வேதிப்பொருளும் பயன்படுத்தப்படுகிறது. இந்த இரு வேறு வேதிப்பொருள்கள் செலுத்துபவர்கள் அருகருகே அமர்ந்து பணி செய்வதும் விபத்துக்கு வழி வகுக்கிறது.
செல்போனுக்கு தடை…
ரசாயன மூலப்பொருட்களுக்கு தனித்தனி சல்லடைகள் பயன்படுத்திட வேண்டும். அனைத்து அறைகளிலும் மண் துகள்கள், தூசிகள் அகற்றப்பட வேண்டும். ஒரு அறையில் 4 பேருக்கு மேல் பணி புரியக்கூடாது. தொழிலாளர்கள் சில்க், பாலியஸ்டர் போன்ற ஆடைகளை அணிந்திருக்கக் கூடாது. தொழிற்சாலையில் செல்போன், பான்பராக், புகையிலை, தூக்குவாளி மற்றும் வட்டர் பாட்டில் போன்றவைகளை அனுமதிக்க கூடாது. உற்பத்தி செய்யப்படும் பட்டாசுகளை உள் மேடையில் காயவைக்காமல் மரத்தடி, தரைகள் மற்றும் வெட்டவெளியில் காயவைக்கப்படுவதும் ஆபத்து. கருந்திரிகள், சாட்டைகளை உரிய இடைவெளியில் காயவைக்க வேண்டும். பட்டாசு கழிவு பொருட்களை முறையாக அகற்ற வேண்டும். தொழிற்சாலையில் நாய், ஆடு, மாடு, பூனை வளர்ப்பதும் கூடாது.
பாதுகாப்பு விஷயங்கள்…
தீ வாளி, தீயணைப்பான்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். போர்மேன்கள் முழுநேரப் பணியில் இருப்பதும், உரிமம் பெற்ற உரிமையாளர்களே தொழிற்சாலைகளை நடத்துவதும் முக்கியம். விதியை மீறி வயது முதிர்ந்தோர், சிறுவர்கள் பணியமர்த்தப்படுவது கூடவே கூடாது. சேமிப்பு அறைகளிலேயே மூலப்பொருட்கள் கலக்கும் பணிகளையும் செய்யக்கூடாது. ஒரே அறையில் அனைத்து மூலப்பொருட்களையும் சேமித்து வைப்பதும் ஆபத்தானது. உற்பத்தி மற்றும் வேலை செய்யும்- இடங்களில் அனைத்து கதவுகளும் திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும், பட்டாசு சேமிப்பு அறைகளில் பட்டாசுகள் முறையாக அடுக்கிவைக்கப்படுவது கட்டாயம். தேவையான தண்ணீர் வசதி வேண்டும். மாதிரி பட்டாசுகள் சோதனை, பணிநேரத்தில் செய்வது கூடவே கூடாது.
உடனடி நடவடிக்கை
தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியில்லாமல் வீடு, குடிசைகள் போன்ற நெருக்கடியான இடங்களில் பட்டாசுகள் உற்பத்தி செய்கின்றனர். இதனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வீதிமீறல் கட்டிடங்களை ஆய்வு செய்து, அந்த ஆலை உரிமையாளர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் பட்டாசு ஆலை விபத்துக்கள் குறைவதோடு, விலை மதிப்பற்ற உயிர்களை நாம் பாதுகாக்க முடியும்.
* தமிழ்நாடு அரசு சார்பில் பாதுகாப்பு பயிற்சி
பட்டாசு ஆலை உரிமையாளர் சன்சைனி கணேசன் கூறும்போது, ‘‘தமிழகத்தில் விபத்தில்லா பட்டாசு உற்பத்திக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். பட்டாசு தொழில் பாதுகாப்பு குறித்து பட்டாசு ஆலை உரிமையாளர்களை அடிக்கடி சந்தித்து தேவையான உதவிகளை செய்து வருகிறார். தமிழ்நாடு அரசு பட்டாசு தொழிற் சாலைகளில், விபத்தில்லா உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடத்தி வருகின்றது.
குறிப்பாக. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் சார்பில் 2,800 பட்டாசு தொழிலாளர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டுள்ளன. விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி என 2 மண்டலமாக பிரித்து பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்ட அனைத்து பட்டாசு தொழிலாளர்களுக்கும் பட்டாசு தயாரிப்பில் பாதுகாப்பு வழிமுறைகள் கையேடு வழங்கப்பட்டது. தொடர்ந்து இது போன்ற பல்வேறு பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன’’ என்றார்.
* வேதியியல் மாற்றத்தால் ஆபத்து
மனிதவள மேம்பாட்டு தனியார் நிறுவன திட்ட இயக்குநர் விஜயகுமார் கூறும்போது, ‘‘தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருட்களை ஒன்றோடு ஒன்று
செலுத்தும்போது. கையாளும்போது வினையுற்று வேதியியல் மாற்றங்களுக்கு ஆளாகி, பெரும் உஷ்ணத்தை உண்டாக்கி ‘எக்சோதெர்மிக்’ எனும் செயலால் வெடி விபத்து ஏற்படுகிறது. வேதியியல் பொருட்களின், வினைகளால் ஏற்படும் வினைகளை பற்றி தொழிலாளிகளுக்கு ஓரளவாவது தெரிந்திருக்க வேண்டும். எந்த அளவுக்கு இடர்பாடுகள் ஏற்படுத்தக்கூடியவை, எந்த அளவுக்கு ஆபத்து நேரக்கூடியவை என்பதை அவர்கள் தெரிந்திருக்க வேண்டும்.
பட்டாசு தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மிக முக்கியமான மற்றும் முதன்மையான கெமிக்கல் அலுமினியப்பவுடர். இது இல்லாத பட்டாசுத் தொழிலே இல்லை. இந்த பவுடர் உலர்ந்த நிலையில் இருக்கும் போது எந்தவொரு துன்பமும் தருவதில்லை. தண்ணீருடன் சேரும்போது வேதிவினை புரிந்து இரு காரணிகள் வேதியியல் துன்பங்களை தோற்றுவிக்கின்றன. ஒன்று தயாரிப்பு செயல்முறை. மற்றொன்று எடை வரையறை. கலவையிலுள்ள ரசாயனத்தின் தன்மை, அந்தக்கலவையை செய்ய கூடியவை, செய்யக்கூடாதவை போன்ற விவரங்கள் தெரிந்தவர்களால் மட்டுமே கையாளப்பட வேண்டும். வேதியியல் மாற்றங்கள் தெரிந்த தொழிலாளர்கள் திறம்பட பணியாற்றினால் பட்டாசு விபத்துகளை தவிர்க்கலாம்’’ என்றார்.
* ஒன்றிய அரசால் பட்டாசு தொழிலுக்கு மாறிய நெசவாளர்கள்
சிஐடியு-பட்டாசு தீப்பெட்டி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எம்.மகாலட்சுமி கூறும்போது, ‘சமீபத்தில் காஞ்சிபுரத்தில் ஏற்பட்ட பட்டாசு விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். 13 பேர் காயமடைந்துள்ளனர். இவர்கள் பட்டாசுத் தொழிலைப் பற்றி முழுமையாக தெரியாத நெசவாளர்கள். ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையினால் சிறு, குறு தொழில்கள் அழிந்து வருகின்றன. நூல் விலை உயர்வால் நெசவுத் தொழில் பெரும் நசிவைச் சந்தித்து வருகிறது. இதனால், வேலையின்றி தவித்து வந்த நெசவாளர்கள், தங்களது குடும்பத்தை பாதுகாத்திடவே ஆபத்தான பட்டாசுத் தொழிலுக்கு சென்று தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர்’ என்றார்.
*பாதை வசதி கட்டாயம்
தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘பட்டாசு ஆலை விபத்தின் போது உடனடியாக 101 என்ற எண்ணுக்கு தகவல் அளிப்பதோடு மட்டுமல்லாமல் அருகில் உள்ள தீயணைப்பு நிலையங்களின் எண்ணிற்கு தகவல் அளித்தல் அவசியம். அந்தந்த எல்லைக்குரிய எண்களை பட்டாசு ஆலையில் எழுதி வைத்திருக்க வேண்டும். தீயணைப்புத் துறையினர் வரும் வரை காத்திருக்க வேண்டுமே தவிர தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சிக்க கூடாது. விபத்து நேர்ந்த இடத்தை விட்டு உடனே நகர வேண்டுமே தவிர வேடிக்கை பார்ப்பதற்காக அங்கு நிற்க கூடாது. பல பட்டாசு ஆலைகள் தீயணைப்பு வாகனங்கள் வருவதற்கு உரிய பாதை வசதியை அமைத்திருக்க வேண்டும்’’ என்றனர்.