சாதி, மத உணர்வை தூண்டும் வகையில் எழுத கூடாது – மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தல்

சென்னை: சாதி, மத உணர்வு மற்றும் பிரிவினையைத் தூண்டும் வகையில் யாரும் எழுதக்கூடாது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

நாட்டின் உயர்ந்த இலக்கியப் பரிசான ‘சரஸ்வதி சம்மான்’ விருதுக்கு எழுத்தாளர் சிவசங்கரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி, வானவில் பண்பாட்டு மையம் சார்பில் அவருக்கு சென்னையில் நேற்று பாராட்டு விழாநடைபெற்றது.

சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எழுத்தாளர் சிவசங்கரிக்கு நினைவுப் பரிசு வழங்கி பேசியதாவது: புத்தக வாசிப்பு குறைந்துவிட்டதாக பலரும் கூறுகின்றனர். அதில் எனக்கு உடன்பாடில்லை. எழுத்துக்கான மரியாதை தற்போதும் உள்ளது. புத்தகத்தைவிட, டிஜிட்டல் வழியில் அதிகம் படிக்கின்றனர்.

வாக்கு, எழுத்து, சொல் ஆகியவற்றுக்கு இருக்கும் சக்தி என்றுமே மாறாது. அதனால்தான் 3,000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட நூல்களில் உள்ள கருத்துகள், தற்போதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எழுத்துகள் மனிதனை அறிந்துகொள்ள உதவுகின்றன. சிவசங்கரியின் எழுத்துகள் மிகவும் ஆழமானவை. அவருக்கு சரஸ்வதி சம்மான் விருது கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

பழங்கால நூல்களில் இடம்பெற்ற கருத்துகள், சமூக நல்லிணக்கம், விருப்பு, வெறுப்பற்ற வாழ்க்கை முறை உள்ளிட்ட நல்ல அம்சங்களை வலியுறுத்தின. எழுத்தின் தாக்கம் அளப்பரியது. அதை யாரும் தவறாகப் பயன்படுத்தக்கூடாது. சாதி, மத உணர்வு, பிரிவினையை தூண்டும் வகையில் எழுதக்கூடாது. அதற்கு மாறாக, மக்களிடம் சமூக நல்லிணக்கம், ஒற்றுமை உணர்வைவலுப்படுத்தும் வகையிலான கருத்துகளை முன்வைத்து எழுத வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்வில் வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் கே.ரவி, தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந.அருள், தொழிலதிபர் நல்லி குப்புசாமி, ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் உரிமையாளர் எம்.முரளி, எழுத்தாளர் சிவசங்கரி, ஓய்வுபெற்ற டிஜிபி ஆர்.நட்ராஜ், பேராசிரியர் பர்வீன் சுல்தானா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.