லண்டன்-பிரிட்டனில் புதிய அரச பரம்பரை பதவியேற்பதைக் கொண்டாடும் வகையில், மன்னர் 3ம் சார்லசின் புகைப்படத்தை அரசு அலுவலகங்களில் வைப்பதற்காக, 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 70 ஆண்டுகளுக்கு மேலாக அரியணையை அலங்கரித்த ராணி இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்., மாதம் காலமானார்.
இதையடுத்து, புதிய மன்னராக 3ம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார். அதிகாரப்பூர்வமாக இவர் பதவியேற்க உள்ள விழா, அடுத்த மாதம் 6ம் தேதி நடக்கவுள்ளது.
லண்டனில் உள்ள புகழ்பெற்ற வெஸ்ட்மினிஸ்டர் அபே கட்டடத்தில் பாரம்பரிய முறைப்படி பிரமாண்டமாக நடக்கவுள்ள விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மன்னர் சார்லசின் புகைப்படத்தை உயர் நீதிமன்றங்கள், பள்ளிகள், போலீஸ் ஸ்டேஷன் உட்பட அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 80 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அந்நாட்டு அமைச்சர் ஒலிவர் டவுடன் கூறுகையில், ”மன்னர் சார்லஸ் பதவியேற்பதை கொண்டாடும் வகையில் மன்னரின் புகைப்படத்தை அனைத்து அரசு அலுவலகங்களிலும் வைக்க முடிவு செய்துள்ளோம்,” என்றார்.